தாம்பரத்தில் திருமாவளவன் உருவபொம்மையை எரித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


தாம்பரத்தில் திருமாவளவன் உருவபொம்மையை எரித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2017 4:15 AM IST (Updated: 12 Dec 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் திருமாவளவனை கண்டித்து பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமாவளவன் உருவபொம்மையை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது.

தாம்பரம்,

இந்து கோவில்கள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாகக்கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட பா.ஜனதா எஸ்.சி. பிரிவு சார்பில் தாம்பரத்தில் வேளச்சேரி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு எஸ்.சி. பிரிவின் மாநில செயற்குழு உறுப்பினர் கோபி தலைமை தாங்கினார். பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பொற்றாமரை சங்கரன், செல்வமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென திருமாவளவன் உருவபொம்மையை வேளச்சேரி சாலையில் போட்டு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு தரப்பினர் சாலையின் மறுபகுதியில் படுத்து மறியல் செய்தனர். மாலை நேரம் என்பதால் ஏராளமான பள்ளி, கல்லூரி வாகனங்கள் வந்தது. இதனால் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலையூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை தூக்கி சாலை ஓரம் தள்ளினர். அப்போது போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே, மற்றொரு பகுதியில் திருமாவளவன் உருவ பொம்மையை மீண்டும் சாலையில் போட்டு தீ வைத்தனர். உடனடியாக போலீசார் அதை பறித்து தீயை அணைத்தனர்.

பின்னர் பா.ஜனதாவினர் சாலையோரம் சென்று நின்றனர். அப்போது அங்கு நின்ற சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாவின் பெயரை குறித்துக்கொண்டு, அவரை மர்ம நபர் ஒருவர் ஒருமையில் திட்டினார். அந்த நபரை அங்கிருந்த போலீசார் அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு பா.ஜனதாவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story