ஆர்ப்பாட்டத்தின்போது எரிக்க முயன்ற திருமாவளவன் உருவபொம்மையை போலீசார் பறித்ததால் பா.ஜ.க.வினர் சாலை மறியல்


ஆர்ப்பாட்டத்தின்போது எரிக்க முயன்ற திருமாவளவன் உருவபொம்மையை போலீசார் பறித்ததால் பா.ஜ.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Dec 2017 4:15 AM IST (Updated: 12 Dec 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது எரிக்க முயன்ற திருமாவளவன் உருவபொம்மையை போலீசார் பறித்ததால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அக்கட்சியினர் 74 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி நெ.1 டோல்கேட் ரவுண்டானா அருகில் புறநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட எஸ்.சி. அணி தலைவர் லோகநாதன், பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் புரட்சிகவிதாசன் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார். மேலும் மாவட்ட தலைவர் மனோகரராஜன் உள்ளிட்டோர் பேசினர். இதையடுத்து திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க.வினர் பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சியின் நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல்

ஆர்ப்பாட்டத்தையொட்டி லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கோடிலிங்கம் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஞானவேலன், பாலச்சந்தர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு காரில் வைத்திருந்த திருமாவளவன் உருவ பொம்மையை திடீரென எடுத்து வந்து எரிக்க முயன்றனர். இதைக்கண்ட போலீசார், உடனடியாக உருவபொம்மையை அவர்களிடம் இருந்து பறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரவுண்டானாவில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 74 பேரை போலீசார் கைது செய்து, அவர்களை உத்தமர்கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப் பட்டனர். 

Next Story