ஆயில் மில்லில் அதிரடி சோதனை: 8,500 லிட்டர் கலப்பட சமையல் எண்ணெய் பறிமுதல்


ஆயில் மில்லில் அதிரடி சோதனை: 8,500 லிட்டர் கலப்பட சமையல் எண்ணெய் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Dec 2017 10:45 PM GMT (Updated: 11 Dec 2017 9:48 PM GMT)

முத்தூரில் ஆயில் மில்லில் நடந்த அதிரடி சோதனையில் 8,500 லிட்டர் கலப்பட சமையல் எண்ணெயை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

முத்தூர்,

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆயில் மில்களில் பாமாயிலை சுத்திகரிப்பு செய்து சமையல் எண்ணெய் என்று மாற்றி பல்வேறு பெயர்களில் மளிகை கடைகள் மூலம் விற்பனை செய்து வருவதாக அரசுக்கு பொதுமக்கள் புகார் செய்தனர். இதுபற்றி உரிய சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டார்.

அதன்பேரில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆலோசனையின்படி, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில் வெள்ளகோவில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரவி, விஜயராஜா மற்றும் குழுவினர் நேற்று மாலை முத்தூர்-கொடுமுடி சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் பழனிசாமி (வயது 35) என்பவருக்கு சொந்தமான லட்சுமி ஆயில் மில்லில் திடீரென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, அந்த ஆயில் மில்லில் பாமாயிலை மொத்தமாக கொள்முதல் செய்து, அவற்றை சுத்திகரித்து, அதை சமையல் எண்ணெய், கடலை எண்ணெய் என்று மாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவ்வாறு மாற்றப்பட்ட கலப்பட சமையல் எண்ணெயை ¼ லிட்டர், ½ லிட்டர், 1 லிட்டர், 5 லிட்டர் என்று பாக்கெட் மற்றும் கேன்களில் அடைத்து பல்வேறு பிராண்டுகளின் பெயரில் மொத்தமாகவும், சில்லரையாகவும் மளிகை கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களுக்கு அனுப்பி பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அந்த ஆயில் மில்லில் இருந்த 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 54 கேன்கள் உட்பட மொத்தம் 8½ லிட்டர் கலப்பட சமையல் எண்ணெயை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5½ லட்சம் ஆகும்.

இதுபற்றி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு ஆயில் மில்களில் பாமாயிலில் கலப்படம் செய்து பல முன்னணி நிறுவனங்களின் பெயரில் கடலை எண்ணெய், சமையல் எண்ணெய், சூரியகாந்தி விதை எண்ணெய் என்று மாற்றி விற்பனை செய்வதாக புகார் வந்தது. தற்போது முத்தூர் பகுதியில் உள்ள இந்த ஆயில் மில்லில் ஆய்வு மேற்கொண்டதில், பாமாயிலை கலப்படம் செய்து சமையல் எண்ணெய்யாக மாற்றி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து இந்த எண்ணெய் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு செய்து உண்மையான தர பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் பாமாயிலை கலப்படம் செய்து சமையல் எண்ணெயாக மாற்றி விற்பனை செய்தது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்டம் 2006 மற்றும் தடங்கல் சட்டம் 2011-ன் படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் இது போல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆயில் மில்களில் தொடர்ந்து ஆய்வு செய்து சோதனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story