கோவையில் காசோலை மோசடி வழக்கில் மலேசிய கராத்தே மாஸ்டர் கைது


கோவையில் காசோலை மோசடி வழக்கில் மலேசிய கராத்தே மாஸ்டர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2017 11:00 PM GMT (Updated: 11 Dec 2017 9:49 PM GMT)

காசோலை மோசடி வழக்கில் மலேசிய கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

கருமத்தம்பட்டி,

கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் வி.எம்.சி.சந்திரசேகர். தொழில் அதிபர். மலேசியாவை சேர்ந்த கராத்தே மாஸ்டர் பொன்னையா துலுக்கானம் என்ற தோனி பொன்னையாவுக்கும் இவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு வி.எம்.சி.சந்திரசேகரிடம் இருந்து தோனி பொன்னையா ரூ.8 லட்சம் கடன் வாங்கினார். பின்னர் அந்த கடன் பணத்தை அவர், திருப்பி கேட்டுள்ளார்.

அப்போது தோனி பொன்னையா ரூ.8 லட்சத்துக்கான காசோலையை அவரிடம் கொடுத்தார். அதை வாங்கிய வி.எம்.சி.சந்திரசேகர், வங்கியில் செலுத்தியபோது வங்கிகணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இது குறித்து அவர், தோனி பொன்னையாவிடம் கேட்டபோது பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாக கூறப்படு கிறது.

கராத்தே மாஸ்டர் கைது

இது குறித்து அவர் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காசோலை மோசடி வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க தோனி பொன்னையா கோவைக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினகரன் தலைமையிலான போலீசார் தெலுங்குபாளையம் பகுதியில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த கராத்தே மாஸ்டர் தோனி பொன்னையாவை நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story