புயலால் இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்; ஒருவருக்கு அரசு வேலை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


புயலால் இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்; ஒருவருக்கு அரசு வேலை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2017 4:45 AM IST (Updated: 12 Dec 2017 10:25 PM IST)
t-max-icont-min-icon

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று குமரி மாவட்டத்தில் ஒகி புயல் சேதங்களை பார்வையிட்டார். கடலில் மாயமான மீனவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், புயலினால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சமும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்தார்.

நாகர்கோவில்,

‘ஒகி‘ புயல் சேதங்களை பார்வையிட குமரி மாவட்டத்துக்கு நேற்று வந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகர்கோவில் அருகே கல்படி என்ற கிராமத்துக்கு சென்றார். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட வாழை பயிரை பார்வையிட்டார். பின்னர் அவர் மீனவ கிராமமான தூத்தூருக்கு சென்றார்.

புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், தூத்தூர் யூதா கல்லூரி அரங்கில் முதல்–அமைச்சர் வருகையை எதிர்பார்த்து திரண்டு இருந்தனர். அங்கு சென்ற எடப்பாடி பழனிசாமியை, ஆயர்கள் நசரேன் சூசை (நாகர்கோவில் கோட்டார்), சூசை பாக்கியம் (திருவனந்தபுரம்) மற்றும் பங்குத்தந்தையர்கள் வரவேற்று அரங்கிற்கு அழைத்துச் சென்றனர்.

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் ஜெயகுமார், உதயகுமார், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராமச்சந்திரன், ககன்தீப்சிங் பெடி, விஜயகுமார் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் அங்கு வந்திருந்தனர்.

மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆயர் நசரேன் சூசை, பூத்துறை பங்குத்தந்தை ஆன்றோ ஜோரிஸ் விளக்கம் அளித்து பேசினர். அதை தொடர்ந்து, மீனவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

எதிர்பாராதவிதமாக துரதிருஷ்டவசமாக புயலால் உயிரிழந்தவர்களுக்கு முதலில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடலில் மாயமாகி இதுவரை கரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவிக்கிறேன். இங்கு பேசி அமர்ந்திருக்கும் பேராயர், புயலால் மீனவ சமுதாயம் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக் கூறினார்.

அரசை பொறுத்தவரைக்கும் புயல் வீசிய மறுகணமே, எனது உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், குமரி மாவட்டத்துக்கு வந்து நிவாரண பணிகளை கவனித்தார். இங்கு தங்கி இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தெந்த விதத்தில் அரசு உதவி செய்யுமோ, அனைத்து விதத்திலும் அரசால் செய்யப்பட்டது.

இருப்பினும், தங்கு கடல் மீன்பிடி தொழில் செய்து கொண்டிருந்த மீனவர்கள் கரை திரும்ப முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது. அந்த சூழ்நிலையில் இருந்த மீனவர்களை உடனடியாக காப்பாற்றுவதற்காக பாரத பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

அப்போது, கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் புயலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் கரை திரும்புவதற்கும், அவர்களை காப்பாற்றுவதற்கும் தேடும் பணியில் தேவையான விமானங்கள், கப்பல்கள், ஹெலிகாப்டர்களை அனுப்பவேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்.

இதேபோல மத்திய உள்துறை மந்திரியையும் 2 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடலுக்கு சென்ற மீனவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியிடமும் வலியுறுத்தினேன். அதற்கு அவர், 18 கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீனவர்களை தேடும் பணியை மேற்கொள்வதாக தெரிவித்தார். தலைமை செயலகத்தில் 2 முறை கடலோர கப்பல்படை, விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகளை அழைத்து, மீனவர்களை தேடும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அவர்களும் அதை செய்வதாக உறுதி கூறினார்கள்.

அதோடு இல்லாமல் உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தோம். அவ்வாறு இங்கு வந்த அதிகாரிகளில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், குமரி மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்தவர்கள். இந்த மாவட்டத்தை பற்றி நன்கு தெரிந்தவர்கள். அதனால் அவர்களை அனுப்பி எந்தெந்த பகுதியில் என்னென்ன தேவையோ அதை மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்ற உத்தரவும் வழங்கப்பட்டது.

அதன்படி, அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இங்கே தங்கி முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வேளாண்மை துறையின் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பெடி இங்கே முகாமிட்டு, விரைந்து செயல்பட வேண்டும், மீனவர்களை தேடும்பணியை முடுக்கிவிடவேண்டும் என ஆணையிட்டோம். அதன்படி, அவரும் இங்கே தங்கி அந்த பணியை மேற்கொண்டு வருகிறார்.

அரசை பொறுத்தவரைக்கும் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களையும், நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும் தொடர்ந்து தேடுகின்ற பணி நடந்து வருகிறது. கடைசி மீனவர் கிடைக்கும் வரை தேடுதல் பணி மேற்கொள்ளப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே பேராயர் சொன்னதை போல், உயிர் விலைமதிக்க முடியாதது. எதை வேண்டுமானாலும் வாங்கலாம், உயிரை விலைக்கு வாங்க முடியாது. அதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆகவே விலை மதிக்க முடியாத உயிரை மீட்பதுதான் எங்கள் தலையாய கடமை. அதில் அரசு முழுமூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

புயல் வருகிற போது இங்கே மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். புயல் வருகின்ற காலங்களிலே மீனவர்களை உடனே காப்பாற்ற ‘ஹெலிபேடு‘ அமைத்தால் எளிதில் காப்பாற்ற முடியும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்கள். இதை ஏற்கனவே மத்திய அரசிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறோம். குமரி மாவட்டத்தில் ஒரு ‘ஹெலிபேடு‘ அமைத்தால் புயல் வீசுகிற போது, பாதிக்கப்படும் மீனவர்களை உடனடியாக கரை சேர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதையும் தெரிவித்துள்ளோம்.

வீடுகளை இழந்தவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று சொன்னார்கள். நிவாரணம் வழங்க அரசு தயாராக இருக்கின்றது. அதுமட்டும் அல்ல, பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

இங்கு அருகாமையில் இருக்கின்ற கேரளாவிலும், மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இறந்து இருக்கிறார்கள், அவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.20 லட்சம் கேரள அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், நமது தமிழக அரசு ரூ.10 லட்சம்தான் அறிவித்து இருக்கிறது என்று சொன்னார்கள்.

மக்களின் குறைகளை போக்குகின்ற இந்த அரசு, மக்களுக்கு எந்த நேரத்தில் துன்பம் ஏற்பட்டாலும், அதை தீர்க்கக்கூடிய அரசு என்ற காரணத்தால் இறந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் புயலால் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலையை கருத்தில் கொண்டு, வாழ்வாதாரம் இழந்த குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ குடும்பங்களுக்கும், வாழ்வாதார உதவியாக தலா ரூ.2,500 ஆயிரம் வழங்குவதாக நான் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தேன். அதன்படி கிட்டத்தட்ட 31 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுகின்றன.

அதற்கு மேலும் ரூ.2500 கூடுதலாக வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே பேராயர் சொன்னது போல் இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும் என தெரிவித்திருந்தார். அநத கோரிக்கை நியாயமான கோரிக்கை என்ற காரணத்தால், இறந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவரின் கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு தமிழ்நாடு அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

காணாமல் போன மீனவர்களை தேடும்பணி முடுக்கிவிடப்பட்டு இறுதிகட்டம் வரை தொடரும் என்று தெரிவித்து இருந்தேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால், காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க ஏதுவாக சட்டப்பூர்வ நடவடிக்கைளை தளர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்கு உரிய அரசாணை வெளியிட்டு வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளேன்.

இங்குள்ள மீனவ குடும்பங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அந்த குழு தனது அறிக்கையை உடனடியாக அளிக்கவும் உத்தரவிட்டுளேன். மேலும், காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் விரைவில் நிவாரணம் பெற ஏதுவாக காத்திருக்கும் காலத்தை எவ்வளவு தளர்வு செய்ய இயலுமோ அவ்வளவு தளர்வு செய்யவும் அறிவுறுத்தி உள்ளேன்.

காணாமல் போன மீனவர்களின் குடும்பத்துக்கும் குறிப்பிட்ட காலத்துக்குள் நிவாரணம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே மேடையில் என்ன கோரிக்கை வைத்தீர்களோ, அதில் பெரும்பாலான கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

அதே போல் நெல் உள்ளிட்ட விவசாய பயிர்களும் புயலினால் சேதமடைந்துவிட்டது. அதற்கு தகுந்த இழப்பீட்டு தொகையையும், நிவாரணத்தையும் அரசு வழங்க இருக்கின்றது. வாழைகள், ரப்பர் மரங்கள் மழையினால், புயல் காற்றினால் சேதமடைந்துள்ளன. எனவே அவற்றை பயிரிட்ட விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும். அதற்கான இழப்பீட்டு தொகை அறிவிப்பை நேற்றே (நேற்று முன்தினம்) அறிவித்துள்ளேன். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்கப்படும்.

புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான் அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் விரைந்து செயல்படுத்தப்படும்.

புயல், கடும் மழை காலங்களில் மீனவர்கள் உடனடியாக தகவல் கொடுக்கவேண்டும் என்றும், அப்படி கொடுத்தால் உடனடியாக அவர்கள் கரை திரும்பிவிடுவார்கள் எனவும், மீனவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது என்றும் இங்கே சொன்னார்கள். ஆகவே மீனவர்களுக்கு தற்போது, உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.65 கோடி மதிப்பீட்டில் 300 அடி உயரம் உள்ள கோபுரங்கள் அமைக்கப்பட்டு, 25 வாட் வி.எச்.எப்., கருவிகளும் 5 வாட் வி.எச்.எப். கருவிகளும் 31.3.2018–க்குள் அரசு வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

புயலால் சேதமடைந்த படகுகளுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என்று கோரிக்கையையும் வைத்திருந்தார்கள். அதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த குழு சேதமடைந்த படகுகளை பார்த்து கணக்கிட்டு, அதன் சேதார விவரங்களை அரசுக்கு தெரிவிக்கின்ற போது, சேதமடைந்த படகுக்கான நிவாரண தொகையும் அரசால் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் மனிதாபிமானத்தோடு அரசு செயல்படுத்தும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அதை தொடர்ந்து குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நன்றி கூறினார். இதை தொடர்ந்து அவர் அங்கிருந்து நாகர்கோவிலுக்கு வந்தார்.


Next Story