குடியிருப்பு பகுதியில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


குடியிருப்பு பகுதியில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2017 4:15 AM IST (Updated: 13 Dec 2017 4:30 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். குடியிருப்பு பகுதியில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்து உள்ளது புதுப்பட்டினம் ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியில் உள்ள 20 கண் பாலம் அருகே உள்ளது காந்திநகர். இங்கு 1000-த்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் விளையாட்டு திடலுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

இந்த இடத்தில் ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு அதில் புதுப்பட்டினம் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரும் குப்பைகளை வந்து கொட்டினர். இதன் அருகே குடிநீர் தொட்டிக்கான குழாய்கள் செல்கிறது. இதனால் தண்ணீர் அசுத்தமாகும் நிலையும் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் அந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் புதுப்பட்டினம் ஊராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காந்திநகர் விளையாட்டு திடலை குப்பைக்கிடங்காக மாற்றும் முயற்சியை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் கவுன்சிலர் முருகேசன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் செந்தில்குமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தலைவி கலைச்செல்வி, நிர்வாகி நசீர் மற்றும் காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை ஊராட்சி ஒன்றிய ஆணையர் துரை அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story