திருமங்கலத்தில் பஸ்சின் படிக்கட்டு உடைந்து விழுந்தது பயணிகள் உயிர் தப்பினர்


திருமங்கலத்தில் பஸ்சின் படிக்கட்டு உடைந்து விழுந்தது பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 13 Dec 2017 5:37 AM IST (Updated: 13 Dec 2017 5:37 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலத்தில் ஓடும் பஸ்சின் படிக்கட்டு உடைந்து விழுந்தது. படிக்கட்டில் யாரும் பயணிக்காததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருமங்கலம்,

உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையைச் சேர்ந்த அரசு டவுன் பஸ் ஒன்று மதுரையை அடுத்துள்ள ஊர்மெச்சிகுளத்தில் இருந்து திருமங்கலம் வந்தது. அந்த பஸ்சில் திருமங்கலம் நகரைச் சேர்ந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அதிக அளவில் பயணித்தனர்.

அந்த பஸ் திருமங்கலம் சந்தைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு பஸ் நிலையம் வந்து கொண்டு இருந்தது. உசிலம்பட்டி ரோட்டில் தனியார் பள்ளி அருகே வந்த போது பஸ்சின் பின் பக்க படிக்கட்டு உடைந்து முழுமையாக கீழே விழுந்து விட்டது. நல்ல வேளையாக யாரும் படிக்கட்டில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஓட்டை உடைசல் பஸ்கள்

பின்னர் அந்த பஸ் போக்குவரத்துக் கழக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் சரியான பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் உள்ளது. இந்த நிலையில் பயணிகள் இறங்கும் படிக்கட்டு பஸ் சென்று கொண்டிருந்தபோதே முழுமையாக உடைந்து விழுந்தது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே போக்குவரத்துக் கழக நிர்வாகம் இது போன்ற ஓட்டை, உடைசல் பஸ்களை அப்புறப்படுத்தி விட்டு புதிய பஸ்களை இயக்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

Next Story