கர்நாடகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெற பா.ஜனதா முயற்சி
கர்நாடகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெற பா.ஜனதா முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
மத்தியில் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு சாமானிய மக்கள் பாதிக்கப்படும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் ஏழை–நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து சரக்கு–சேவை வரி அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தினர்.அதன் தொடர்ச்சியாக இப்போது வங்கிகள் திவாலானால் மக்களின் டெபாசிட் பணத்தை திரும்ப வழங்காமல் இருக்க ஒரு சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. வங்கிகளில் பெரும் முதலாளிகள் வாங்கும் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏராளமான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.
அந்த நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்ப செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன. இதையடுத்து அந்த கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய திட்டமிட்டுள்ளது. வங்கிகள் நஷ்டம் அடைவதை தடுக்க மத்திய அரசு நிதி தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு என்ற பெயரில் புதிய சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது.அது தற்போது பாராளுமன்ற கூட்டு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. நாட்டில் உள்ள வங்கிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 2016–17–ம் ஆண்டில் ரூ.81 ஆயிரத்து 683 கோடி தொழில் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வங்கிகளில் மோசமான கடன் 41 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
தொழில் கடன் தள்ளுபடி, வங்கிகளுக்கு ஏற்படும் இழப்புகளை சரிக்கட்ட மக்களின் டெபாசிட் பணத்தை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெபாசிட் தொகை மக்களுக்கு உடனடியாக கிடைக்காது. அதை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகே வழங்கும் என்று வங்கிகள் கூற முடியும் அல்லது அந்த பணம் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்காமலும் போகலாம். இதற்கு அந்த சட்ட மசோதாவில் தேவையான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.ஏழை–நடுத்தர மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுத்துவதையே நோக்கமாக கொண்டு மோடி அரசு செயல்பட்டு வருகிறது. எனவே இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ள மக்களுக்கு எதிரான அம்சங்களை நீக்க வேண்டும் இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சி தீவிரமாக போராடும் என்று எச்சரிக்கை தெரிவிக்கிறேன்.
சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு(2018) நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலத்தில் அமைதியை கெடுக்க பா.ஜனதாவினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். உத்தரகன்னடா மாவட்டத்தில் இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.இதை வைத்து சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. இதை நான் கண்டிக்கிறேன். சட்டம்–ஒழுங்கை நிலைநாட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பங்கம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மதக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெற பா.ஜனதா முயற்சி செய்கிறது.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.