கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ‘திடீர்’ போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர்  அர்ஜூன் சம்பத் ‘திடீர்’ போராட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2017 11:00 PM GMT (Updated: 13 Dec 2017 5:20 PM GMT)

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் மனு கொடுக்க வந்த போது அதிகாரிகள் இல்லாததால் ‘திடீர்’ போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் மாவட்ட தலைவர் சுபா.முத்து மற்றும் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் ஒரு கோரிக்கை மனு அளிக்க வந்தனர். அப்போது அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயலால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாத அளவு சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த புயலால் மீனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டது போல நினைத்து மத்திய மாநில அரசுகள் செயல்படுகின்றன. ஆனால் விவசாயிகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மீனவர்களுக்கு வழங்குவதுபோல விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருப்பதுபோல உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கும் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். புயல் பற்றியும், புயலால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றியும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனக்கு தானே விளம்பரம் தேடுகிறார். இந்து கோவில் தொடர்பாக அவர் அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக அரசு திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ஆர்.கே.நகரில் ஏற்கனவே பணப்பட்டுவாடா நடந்ததால் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதியில் இன்னும் போலி வாக்காளர்களின் பெயர்கள் கூட நீக்கப்படவில்லை. ஜனநாயக முறைப்படி ஆர்.கே.நகரில் தேர்தல் நடைபெற வாய்ப்புகள் இல்லை. எனவே தேர்தலை ரத்து செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினர் மனு அளிக்க சென்றபோது கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இல்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததை கண்டித்தும், தங்களது மனுவை பெற உடனடியாக அதிகாரிகள் வரவேண்டும் என்று வலியுறுத்தியும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து இந்து மக்கள் கட்சியினர் அர்ஜூன் சம்பத் தலைமையில் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கலைந்துபோகும்படி கூறினார்கள். ஆனால் இந்து மக்கள் கட்சியினர் கலைந்துபோக மறுத்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் பிரிவில் இந்து மக்கள் கட்சியினர் தங்களது மனுவை கொடுத்துவிட்டு சென்றனர்.


Next Story