அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி விடுதி மாணவர்கள் தர்ணா போராட்டம்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி விடுதி மாணவர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2017 4:30 AM IST (Updated: 14 Dec 2017 12:03 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி விடுதி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கே.கே.நகர்,

திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் அம்பேத்கர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 250–க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருந்து திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் விடுதியில் தரமான உணவு வழங்க வேண்டும். போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். தூய்மையான கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி விடுதி மாணவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

ஆனாலும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி நேற்று காலை விடுதி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து மாணவர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட உணவை உட்கொள்ளாமலும், கல்லூரிக்கு செல்லாமலும் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை துணை கலெக்டர் சாந்தி, தாசில்தார் சுப்பிரமணியபிள்ளை ஆகியோர் அங்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவர்களை கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. விரைவில் மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story