ஒகி புயலின்போது மாயமான மீனவர்கள் பற்றிய முழு விவரத்தை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்
ஒகி புயலில் மாயமான மீனவர்கள் பற்றிய முழு விவரத்தை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாமல்லபுரம்,
ஒகி புயலின் போது மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்கக்கோரியும், மாயமான மீனவர்களின் உண்மைத்தன்மை குறித்த முழு விவரங்களை வெளியிடக்கோரியும் மாமல்லபுரத்தில் நேற்று காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கங்கை கொண்டான் மண்டபம் அருகில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக்குழு ஒருங்ணைப்பாளர் மல்லை சந்தரு தலைமை தாங்கினார். அரவிந்த், கண்ணன், லிங்கேஸ்வரன், பஞ்சாட்சரம், கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது அவர்கள் புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், ஒகி புயலில் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாமல்லபுரம், தேவனேரி, வெண்புருஷம், கொக்கிலமேடு, பட்டிபுலம், புதுஎடையூர், சாலவான்குப்பம் உள்ளிட்ட 10 மீனவ கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
மேலும் புயலில் சிக்கி இறந்த கன்னியாகுமாரி மாவட்ட மீனவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மாமல்லபுரம் சுற்றுவட்டார 10 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.