கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.18 லட்சம் தங்க உத்திராட்ச மாலை பறிமுதல்


கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.18 லட்சம் தங்க உத்திராட்ச மாலை பறிமுதல்
x
தினத்தந்தி 14 Dec 2017 3:45 AM IST (Updated: 14 Dec 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்க உத்திராட்ச மாலையை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது இலங்கையை சேர்ந்த சுதாகரன் (வயது 41), பாலசிங்கம் (64) ஆகியோர் வந்தனர். இவர்களிடம் இருந்த உத்திராட்ச மாலையை சுங்க இலாகா அதிகாரிகள் வாங்கி பரிசோதனை செய்தனர். அப்போது அவை தங்கத்தால் செய்யப்பட்ட உத்திராட்ச மாலை என்பது தெரியவந்தது.

இதையடுத்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள 630 கிராம் எடை கொண்ட அந்த உத்திராட்ச மாலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சுதாகரன், பாலசிங்கம் ஆகியோரை பிடித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

விசாரணையின் முடிவில் தான், அவர்கள் யாருக்காக கொழும்பில் இருந்து தங்க உத்திராட்ச மாலையை கடத்தி வந்தார்கள் என்பது தெரியவரும்.


Next Story