பெரம்பலூரில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 3 பேர் கைது 6 பவுன் மீட்பு


பெரம்பலூரில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 3 பேர் கைது 6 பவுன் மீட்பு
x
தினத்தந்தி 14 Dec 2017 3:45 AM IST (Updated: 14 Dec 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பவுன் நகை மீட்கப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் வடக்குமாதவி ரோடு சாமியப்பா நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மஞ்சு (வயது 31). கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மஞ்சுவை மர்ம நபர்கள் சிலர் மிரட்டி அவரிடமிருந்து 6 பவுன் நகையை பறித்து சென்றனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

3 பேர் கைது

இந்நிலையில் நேற்று முன் தினம் பெரம்பலூர் பழைய பஸ்நிலைய பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் வடக்குதெருவை சேர்ந்த தங்கையன் (35), திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஊட்டத்தூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (47), பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த சீனிவாசன் (38) என்பது தெரிய வந்தது. போலீசாரிடம் முன்னுக்குபின் முரணாக பதில் கூறிய அந்த நபர்கள், மஞ்சுவிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் தங்கையன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மீட்பு

பின்னர் அவர்களை பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 பவுனை போலீசார் மீட்டனர். தங்கையன் உள்பட 3 பேரும் பெரம்பலூரில் பெயிண்டிங் வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்தனர். அப்போது மஞ்சுவின் வீட்டை நன்கு நோட்டமிட்டு ஆள் இல்லாததை அறிந்ததும் நகை பறிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர் என போலீசார் தெரிவித்தனர். 

Next Story