கர்நாடகத்தில் 11 அரசு அதிகாரிகள் வீடு–அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை சோதனை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாநிலம் முழுவதும் 11 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினார்கள்.
பெங்களூரு,
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாநிலம் முழுவதும் 11 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த அதிகாரிகள் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் குவித்தது அம்பலமாகியது.
கர்நாடகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, மாநிலத்தில் உள்ள 11 அரசு அதிகாரிகளின் வீடுகள், அவர்களது அலுவலங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.அதன்படி, பெங்களூரு மாநகராட்சி பசவனகுடி மண்டலத்தில் உதவி என்ஜினீயராக இருந்து வரும் தியாகராஜ் என்பவருடைய வீடு–அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அதாவது தியாகராஜுக்கு சொந்தமான வீட்டிலும், பசவனகுடியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திலும் நேற்று ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது தியாகராஜின் வீடு, அலுவலகங்களில் இருந்து சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள், பணம், தங்க நகைகள் ஆகியவை ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தியாகராஜிக்கு சொந்தமான வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதுபோல, பெங்களூரு நகர வளர்ச்சி திட்டத்தின் துணை இயக்குனரான சசிகுமார், கர்நாடக தொழிலாளர் நலத்துறையின் இணை இயக்குனராக இருந்து வரும் வாசண்ணா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள், அலுவலங்கள், உறவினர்களின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது அதிகாரிகள் சசிகுமார், வாசண்ணா ஆகியோர் தங்களது வருமானத்தைவிட கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களது வீடுகள், அலுவலகங்களில் இருந்த சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
இதேபோன்று, துமகூருவில் பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயராக உள்ள ஜெகதீஷ், கார்வார் மாவட்டம் அங்கோலாவில் சிறியநீர் பாசனத்துறை உதவி என்ஜினீயராக இருந்து வரும் பாண்டுரங்கா, சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் சிறியநீர் பாசனத்துறை உதவி என்ஜினீயர் ஹேமந்த், மண்டியா மாவட்ட பஞ்சாயத்துராஜ் துறை அதிகாரி சந்திரகாந்த், சிவமொக்கா உதவி என்ஜினீயர் மல்லப்பா ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களிலும் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தினார்கள்.மேலும் பல்லாரியை சேர்ந்த அரசு அதிகாரி சேக்ஷாவலி, பெலகாவி கானாபூரை சேர்ந்த உதவி என்ஜினீயர் சுரேஷ் நாயக், மங்களூரு பண்ட்வாலை சேர்ந்த அரசு அதிகாரி மிராண்டா ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து ஊழல் தடுப்பு படை போலீஸ் டி.ஜி.பி. சரத் சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:–
கர்நாடகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்தை விட சொத்துகள் சேர்த்து வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு படைக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அந்த புகார்களின் அடிப்படையில் பெங்களூரு, துமகூரு, சிக்பள்ளாப்பூர், மண்டியா, சிவமொக்கா, பல்லாரி, பெலகாவி, கார்வார், மங்களூரு ஆகிய ஊர்களில் அரசு அதிகாரிகளாக பணியாற்றி வரும் 11 பேரின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையின் போது அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் இருந்து சொத்து பத்திரங்கள், பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அந்த அதிகாரிகளின் வீடுகளில் இருந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனை நடத்தப்பட்ட அதிகாரிகளின் வங்கி கணக்குகள், லாக்கர்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
முதற்கட்ட விசாரணையில் 11 அதிகாரிகளும் தங்களது வருமானத்தைவிட பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சோதனை நடத்தப்பட்ட அதிகாரிகள் 11 பேரும் தங்களது வருமானத்தை மீறி அசையும் மற்றும் அசையா சொத்துகள் சேர்த்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு போலீஸ் டி.ஜி.பி. சரத் சந்திரா கூறினார்.