மலையை வெட்டி எடுப்பதற்கு 3 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு


மலையை வெட்டி எடுப்பதற்கு 3 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 Dec 2017 4:15 AM IST (Updated: 15 Dec 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் அருகே மலையை வெட்டி எடுப்பதற்கு 3 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்து உள்ளனர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தனக்கன்குளம் ஊராட்சி. சுமார் 15 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இந்த ஊராட்சியானது பேரூராட்சி அந்தஸ்தில் தரம் உயரும் நிலையில் உள்ளது. இந்த ஊராட்சியின் எல்லையில் வடக்குப் பகுதியில் 4 வழிச்சாலை அருகே கல் பாறைகள் கொண்ட நீண்ட மலைத்தொடர் உள்ளது. இங்கு தனக்கன்குளம் மற்றும் கீழக்குயில்குடி கிராம மக்கள் வழிபடக் கூடிய வைரவன சாமி கோவில் உள்ளது. பல நூற்றாண்டு காலமாக தலைமுறை, தலைமுறைகளாக தொன்று தொட்டு இந்த 2 கிராம மக்களும் வைரவன சாமியை வழிபட்டு வருகிறார்கள்.

மேலும் தரைமட்டத்தில் இருந்து சுமார் 200 அடி உயரத்தில் பெரும் பாறை கற்கள் நிறைந்த நீண்ட மலைத் தொடரில் இருந்து விழும் மழை நீரானது தனக்கன்குளம் பெரிய கண்மாய்க்கு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. தனக்கன்குளம், கீழக்குயில்குடி, விளாச்சேரி ஆகிய 3 கிராம மக்களின் குடிநீருக்கான நிலத்தடி நீர் ஆதாரமாக பெரிய கண்மாய் விளங்குகிறது.

இத்தகைய மலையை தனி நபர்கள் சிலர் விவசாய நிலமாக பத்திரப் பதிவு செய்து கிராவல் குவாரி அமைப்பதற்கு மலையை வெட்டி அப்புறப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

மலைத்தொடரை வெட்டி எடுத்தால் எதிர்காலத்தில் 3 கிராமங்களுக்கும் நிலத்தடி நீர் ஆதாரம் கேள்விக்குறியாகி குடிநீர் தட்டுப்பாடு உருவாகும். எனவே மலை வெட்டி எடுக்கப்படுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் தற்காலிகமாக மலை பாறையிலிருந்து மண் மற்றும் கல் வெட்டி எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே தனக்கன்குளம் மந்தை திடலில் கிராம மக்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் மழைநீருக்காக மலையை பாதுகாப்போம், அதன் மூலம் வைரவன சாமியும் பாதுகாக்கப்படும், மலையை வெட்டி எடுப்பதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கும், மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுப்பது என்று முடிவு செய்தனர். மேலும் அவர்கள் மலையை வெட்டி எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளனர். 

Next Story