கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக்கொடி தி.மு.க.– விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்


கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக்கொடி தி.மு.க.– விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2017 4:30 AM IST (Updated: 16 Dec 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காண்பித்து போராட்டம் நடத்தினார்கள்.

கடலூர்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்வேன் என்று அறிவித்திருந்தார். அதன்படி அவர் ஏற்கனவே கோவை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். ஆனால் கவர்னரின் செயல் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று கூறி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். கவர்னரின் செயலுக்கு எதிராக அறவழி போராட்டத்தில் தி.மு.க.வினர் ஈடுபடுவார்கள் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக கடலூர் மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் வருகை தந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் விருத்தாசலத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு இரவில் கடலூர் சுற்றுலா மாளிகைக்கு வந்து தங்கினார்.

பின்னர் அவர் நேற்று காலையில் கடலூர் வண்டிப்பாளையம் மற்றும் அம்பேத்கர் நகருக்கு நேரில் சென்று தூய்மை இந்தியா திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். கவர்னர் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவதற்காக கடலூர் பாரதி சாலையில் உள்ள நகர தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க.வினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் நேற்று காலை 9 மணிக்கே திரண்டு வந்திருந்தனர்.

இதனால் கடலூர் சுற்றுலா மாளிகை அருகில் இருந்து பாரதிசாலையில் உள்ள தி.மு.க. அலுவலகம் வரை நூற்றுக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தி.மு.க. அலுவலகம் முன்பும் ஏராளமான போலீசார் அரண்போல நின்று கொண்டு இருந்தனர். காலை 9.30 மணிக்கு ‘சைரன்’ ஒலியுடன் போலீசாரின் வாகன அணிவகுப்பு பாரதிசாலை வழியாக வந்தது. இதனால் கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டுவதற்காக தி.மு.க. அலுவலகத்தில் இருந்த கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும் மற்ற நிர்வாகிகளும், இருகட்சி தொண்டர்களும் கட்சிக்கொடிகளுடனும், கருப்புக்கொடிகளுடனும் ரோட்டுக்கு திரண்டு வந்து கவர்னருக்கு எதிராக எதிர்ப்பு கோ‌ஷங்களை போட்டனர்.

மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி உள்ளிட்டோர் சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் ஏறி நின்று கொடி பிடித்தபடி கவர்னருக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். ஆனால் அந்த வழியாக போலீஸ் வாகன அணிவகுப்பு மட்டும் தான் வந்ததே தவிர கவர்னர் வரவில்லை. கவர்னர் செம்மண்டலம், கம்மியம்பேட்டை வழியாக வண்டிப்பாளையத்துக்கு சென்று விட்டார்.

இதனால் ஏமாற்றம் அடைந்த தி.மு.க.வினர் கவர்னரை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோ‌ஷமிட்டபடி தலைமை தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஆனால் உட்லண்ஸ் ஓட்டல் சந்திப்புக்கு முன்னதாகவே திரும்பி மீண்டும் கட்சி அலுவலகத்துக்கு வந்து விட்டனர்.

இந்த நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்டப்பணிகளை ஆய்வு செய்து விட்டு வண்டிப்பாளையத்தில் இருந்து சுற்றுலா மாளிகைக்கு செல்வதற்காக காலை 10.30 மணி அளவில் பாரதி சாலை வழியாக வந்து கொண்டு இருந்தார்.

அப்போது நகர தி.மு.க. அலுவலகம் முன்பு கவர்னரின் கார் வந்த போது, அவருக்கு எதிராக தி.மு.க.வினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கருப்புக்கொடி காண்பித்து கோ‌ஷம் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் கவர்னரின் வாகன அணிவகுப்புக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் தி.மு.க.வினர் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் பாரதிசாலையில் நேற்று காலை 9 மணி முதல் 11 மணி வரை பரபரப்பாக இருந்தது.

கடலூரில் கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் அறிவித்து இருந்தது. வண்டிப்பாளையத்தில் கவர்னர் ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பி வந்தபோது கருப்புக்கொடி காண்பிப்பதற்காக அண்ணாபாலம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தயாராக நின்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் உடனடியாக சென்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரிடம் இருந்த கட்சிக்கொடிகளையும், கருப்புக்கொடிகளையும் பிடுங்கி சென்றனர்.

இதனால் பகல் 11.30 மணி அளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அண்ணாபாலம் அருகில் இருந்து கவர்னர் தங்கியிருந்த சுற்றுலா மாளிகைக்கு கருப்புக்கொடிகளுடன் ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி பஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.


Next Story