மதுரை அருகே பயங்கரம்: பஸ்சை வழிமறித்து வாலிபர் வெட்டிக்கொலை


மதுரை அருகே பயங்கரம்: பஸ்சை வழிமறித்து வாலிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 16 Dec 2017 5:45 AM IST (Updated: 16 Dec 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே ஓடும் பஸ்சை வழிமறித்து அதில் இருந்த ஒரு வாலிபரை 10 பேர் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

மதுரை,

 திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் இருந்து மதுரைக்கு நேற்று மதியம் 1 மணி அளவில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை மல்லணம்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். மேலமங்கலத்தைச் சேர்ந்த ரமேஷ் (40) நடத்துநராக இருந்தார். அந்த பஸ் மதியம் 2 மணி அளவில் வாடிப்பட்டியை அடுத்துள்ள தனிச்சியம் பிரிவு முன்பாக வந்து கொண்டிருந்தபோது கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் வந்த 10 பேர் திடீரென பஸ்சை வழிமறித்து நிறுத்தினர்.

பின்னர் அந்த கும்பல் மளமளவென பஸ்சுக்குள் ஏறி யாரையோ தேடியது. அப்போது, பஸ்சின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வாலிபரை அந்தக் கும்பல் சுற்றி வளைத்து அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிச்சாய்த்தது. இதில் அவரது உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் பஸ்சுக்குள்ளேயே விழுந்து இறந்தார்.

பஸ்சுக்குள் திடீர் என நடந்த இந்த கொடிய சம்பவத்தை கண்ட சக பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓடினர். டிரைவர், கண்டக்டரும் செய்வதறியாது திகைத்தனர்.

தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரை கரிமேட்டை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் அமர் என்கிற அமரேஷ் (22) என்பதும், அவர் பல்வேறு வழக்குளில் தொடர்புடைய ரவுடி என்றும் தெரிய வந்தது. மேலும் இவர் கடந்த 2011–ம் ஆண்டு மதுரையில் ராம்பிரசாத் என்பவரது கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி என்றும் தெரியவந்தது.

எனவே பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அமரேஷுக்கு திருமணமாகி வனஜா (20) என்ற மனைவி உள்ளார். அவர் 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

இதனிடையே கொலை கும்பல் பயன்படுத்திய கார் செக்கானூரணியை அடுத்த அச்சம்பத்து சுடுகாடு அருகே நின்றது. அதில் கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்களும் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story