நாகர்கோவில் அருகே கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுரை கூறியவரை குத்திக் கொன்ற மருத்துவ மாணவர்


நாகர்கோவில் அருகே கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுரை கூறியவரை குத்திக் கொன்ற மருத்துவ மாணவர்
x
தினத்தந்தி 16 Dec 2017 5:00 AM IST (Updated: 16 Dec 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுரை கூறிய தந்தையின் நண்பரை மருத்துவ மாணவர் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தக்கலை,

நாகர்கோவிலை அடுத்த தக்கலை அருகே அப்பட்டுவிளை சிவனிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 51). கட்டிட காண்டிராக்டர். கேரளாவில் கொல்லம் பகுதியில் தங்கி இருந்து பணிகளை கவனித்து வருகிறார். அவருடைய மனைவி வசந்தி. இவர்களுக்கு சந்தோஷ்குமார் (26) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

சந்தோஷ்குமார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில், எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு செல்லாமல் அடிக்கடி விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்தோஷ்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் சந்தோஷ்குமார் சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார். ஆனால் அவர் மீண்டும் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். பெற்றோர் அவரை கல்லூரிக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் அதை கேட்கவில்லை.

மகனின் இந்த செயலால் குமார் மனவருத்தம் அடைந்தார். இதுபற்றி தனது நண்பர்களான கேரள மாநிலம் கொல்லம் சாஸ்தான்கோட்டையை சேர்ந்த சக கட்டிட காண்டிராக்டர்களான நவ்ஷாத் (47), இக்பால் (50) ஆகிய இருவரிடமும் கூறி வருத்தப்பட்டுள்ளார். அவர்கள் குமாரை சமாதானம் செய்தனர். தாங்கள் இருவரும் வந்து சந்தோஷ்குமாரிடம் பேசி அவரை, கல்லூரிக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். நண்பர்களின் இந்த முயற்சியால் குமார் மகிழ்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் நவ்ஷாத், இக்பால் ஆகிய இருவரும் கேரளாவில் இருந்து காரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் குமாரின் வீட்டுக்கு வந்தனர். சந்தோஷ்குமாரை தனி அறைக்கு அழைத்து சென்று கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுரை கூறியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார் அங்கு கிடந்த கத்தியை எடுத்து நவ்ஷாத்தை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதனால் நவ்ஷாத்தும், இக்பாலும் அலறினர்.

உடனே வீட்டில் உள்ளவர்களும், அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்து பார்த்த போது, அங்கு நவ்ஷாத் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதற்கிடையே சந்தோஷ்குமார் அங்கிருந்து ஓடி வீட்டின் மாடியில் சென்று பதுங்கிக்கொண்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தக்கலை போலீஸ் இன்ஸபெக்டர் சிவசங்கரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தோஷ்குமாரை மடக்கி பிடித்தனர்.

கொலை செய்யப்பட்டு கிடந்த நவ்ஷாத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அறிவுரை கூற வந்த தந்தையின் நண்பரை மருத்துவ கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறுதி ஆண்டு படிப்பை முடித்து மகன் டாக்டராவான் என்ற அவருடைய பெற்றோரின் எதிர்பார்ப்பு இந்த கொலை சம்பவத்தால் கானல் நீராகிப் போனது.


Next Story