திருட்டு கார்களை வாங்கி நூதன முறையில் மாற்றி விற்பனை செய்தவர் கைது


திருட்டு கார்களை வாங்கி நூதன முறையில் மாற்றி விற்பனை செய்தவர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2017 4:44 AM IST (Updated: 16 Dec 2017 4:44 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநில கொள்ளை கும்பலிடம் இருந்து திருட்டு கார்களை வாங்கி நூதன முறையில் மாற்றி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

மராட்டிய மாநில போலீசார் அங்கு கார் திருட்டு வழக்கில் சிலரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது புதுவையை சேர்ந்த முருகன் என்ற மாசிலாமணி (வயது 43) என்பவர் அங்கிருந்து திருட்டு கார்களை வாங்கி வந்து அதனுடைய என்ஜீன் நம்பர், ஜேஸ் நம்பர் ஆகியவற்றை மாற்றி புதுவையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுபற்றி மராட்டிய போலீசார், புதுவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் தலைமையில் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ், கோரிமேடு போலீசார் இது தொடர்பாக பல்வேறு கார் பழுதுபார்க்கும் நிலையங்கள், 2–ம்தர கார் விற்பனை செய்யும் நிலையங்களில் தீவிர விசாரணை நடத்தி முருகனை வலைவீசி தேடி வந்தனர். அப்போது முருகன் தொடர்பாக போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்தன

இந்த நிலையில் நேற்று கோரிமேடு பகுதியில் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அந்த பகுதி வழியாக ஒரு காரில் வந்த முருகனை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். மேலும் அவர் வந்தது திருட்டு கார் என்பதும் தெரியவந்தது. உடனே அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். மராட்டியம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள கொள்ளை கும்பலிடம் இருந்து திருட்டு கார்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்துள்ளனார்.

பின்னர் புதுவை மற்றும் தமிழக பகுதிகளில் விபத்தில் சிக்கிய கார்களை உரிய ஆவணங்களுடன் வாங்கி அதனுடைய என்ஜீன் நம்பர், ஜேஸ் நம்பர் ஆகிவற்றை கச்சிதமாக அகற்றி விட்டு அதனை நூதன முறையில் திருட்டு கார்களில் பொருத்தி விற்பனை செய்துள்ளார். பின்னர் விபத்தில் சிக்கிய கார்களின் பாகங்களை பிரித்து சென்னை புதுபேட்டைக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளார்.

அவர் 30–க்கும் மேற்பட்ட திருட்டு கார்களை இவ்வாறு நூதன முறையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் இது குறித்து மராட்டிய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மும்பையில் இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுகான் மற்றும் போலீசார் நேற்று புதுவை வந்தனர். அவர்களிடம் முருகனை போலீசார் ஒப்படைத்தனர்.

முருகனை கைது செய்த சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் கோரிமேடு போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் பாராட்டு தெரிவித்தார்.


Next Story