லஞ்சமாக வெளிநாட்டு மதுபாட்டில் வாங்கிய அதிகாரி கைது
மிரா பயந்தரில் லஞ்சமாக வெளிநாட்டு மதுபாட்டில் வாங்கிய சுகாதாரத்துறை அதிகாரி சிக்கினார்.
மும்பை,
மது பிரியரான பிரகாஷ் ஹரிஷ் சந்திர ஜாதவ், தனக்கு விலையுயர்ந்த வெளிநாட்டு சரக்கு பாட்டில் வாங்கி தந்தால் தான் உங்களுக்கு சாதகமாக செயல்படுவேன் என்று விடாப்பிடியாக கூறினார். அது மட்டும் இல்லாமல், அந்த பாட்டிலின் ‘பிராண்டு’ பெயரை கூறிய அவர், 15 ஆயிரத்து 884 ரூபாய் மதிப்பிலான அந்த மதுபாட்டிலை இந்த கையில் வைத்து விட்டு, அந்த கையில் பணி நியமன ஆணையை பெற்று செல்லுமாறு கூறினார்.
இதனால், அதிர்ச்சிக்குள்ளான மருத்துவ அதிகாரி, என்ன செய்வதென்று புரியாமல், விழிப்பிதுங்கி நின்றார். ஒரு வழியாக இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர், அவர்களது ஆலோசனைப்படி, சுகாதாரத்துறை அதிகாரி பிரகாஷ் ஹரிஷ் சந்திர ஜாதவை அவரது அலுவலகத்திலேயே நேற்று காலை சந்தித்து, வெளிநாட்டு மதுபாட்டிலை அவரிடம் நீட்டினார்.உற்சாகம் பொங்க அந்த பாட்டிலை ஆவலோடு வாங்கிய அவர், அதன் வாசனையை முகர்ந்தார். இதனை மறைமுகமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும், களவுமாக கைது செய்தனர். பாட்டிலை கொடுக்க மனம் வராமல், போலீசாரிடம் அதனை கனத்த இதயத்துடன் ஒப்படைத்தார். இந்த காட்சி அங்கிருந்த ஊழியர்கள் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.