ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் சரத்குமார் பேட்டி


ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 17 Dec 2017 11:00 PM GMT (Updated: 2017-12-17T23:05:23+05:30)

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

குளச்சல்,

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குளச்சலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

‘ஒகி’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பை நேரில் அறிந்துகொள்வதற்காக குமரி மாவட்டம் வந்தேன். புயலால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பலத்த சேதமடைந்திருக்கின்றன. நேற்றையதினம் (அதாவது நேற்று முன்தினம்) கடற்கரை கிராமங்களுக்கு சென்று, புயலினால் கடலில் மாயமான மீனவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். மேலும், அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள் குறித்தும் கேட்டறிந்தேன். குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடலில் மாயமான மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பணியை இன்னும் துரிதப்படுத்த வேண்டும். இதுபோன்ற பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் குளச்சலில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தொடர்பு கொள்ள நவீன கருவிகள் வழங்க வேண்டும். கடலில் மாயமான மீனவர்கள் இறந்ததாக உறுதி செய்ய 7 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை உள்ளது. அந்த காலத்தை குறைத்து, மீனவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு தொகையினை விரைவில் கிடைக்கச்செய்ய அரசிடம் வலியுறுத்தப்படும்.

மேலும், மக்களின் பிரச்சினைகளை முதல்–அமைச்சரிடம் எடுத்து கூறி உரிய நிவாரணங்கள் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடலுக்கு சென்ற அனைத்து மீனவர்களும் கரை திரும்புவார்கள் என்ற தகவல் உள்ளது. அவ்வாறு கரை திரும்பாத மீனவர்களை மாயமானவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உள்ளது. ஆகவே, கவர்னர் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பது தவறு என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்.கே.நகரில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவேண்டியது தேர்தல் ஆணையம் தான். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரும் போது ச.ம.க. தன் நிலைப்பாடை அறிவிக்கும். அதுவரை சற்று பொறுமை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story