பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சேலத்தில் அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சேலத்தில் அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
சேலம்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு நிலுவை தொகையினை 1.1.2006 முதல் பணப்பயனாக வழங்கப்பட வேண்டும் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு ஜாக்டோ–ஜியோ–கிராப் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜேந்திரன், பாரி, கோவிந்தராசு ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது, அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளில் மத்திய அரசு அலுவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரமாக அறிவித்தது போல், தமிழக அரசு ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் ஊதியம் ரூ.18 ஆயிரம் ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும், தமிழகத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் தற்போது பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதை கருத்தில் கொண்டு, டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் உள்ளதுபோல் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கும் தனி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து கூட்டமைப்பு மாநில தலைவர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:–
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து நிலை பணியாளர்கள் இணைந்து அமைக்கப்பட்டுள்ள ஜாக்டோ–ஜியோ–கிராப் கூட்டமைப்பு சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நவம்பர் 30–ந் தேதிக்குள் வல்லுனர்கள் குழுவின் அறிக்கையை பெற்று சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏற்கனவே 2013–ம் ஆண்டு இதேபோல் போராட்டம் நடத்தியதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எஸ்மா சட்டம் பாய்ந்தது. ஆனால் அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி தற்போது உண்ணாவிரதம் இருந்து வருகிறோம். இதன்பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.