7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்


7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2017 11:00 PM GMT (Updated: 2017-12-18T02:52:48+05:30)

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

தமிழகம் முழுவதும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ–ஜியோ–கிராப் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. அதன்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று போராட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சோமசுந்தரம், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் நேரு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், வின்சென்ட் பால்ராஜ், கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:–

* பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

* ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

* 6–வது ஊதியக்குழு முரண்பாடுகளை சரிசெய்து திருத்திய ஊதிய மாற்றம் கொண்டு வரவேண்டும்.

* ஊதியக்குழு நிலுவை தொகையை 1–1–2016 முதல் பணப்பயனாக கணக்கிட்டு வழங்க வேண்டும்.

* தமிழக அரசு அலுவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

* ஊதியத்துடன் தனி ஊதியத்தை சேர்த்து ஊதிய உயர்வு, அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி ஆகியன கணக்கிட வேண்டும்.

* சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கிராம உதவியாளர்கள், பள்ளிக்கல்வித்துறை துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தணிக்கையாளர் கே.வெங்கட்ராகவன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இதில் மாவட்ட நிதிக்காப்பாளர்கள் டி.திம்மராயன், வி.எஸ்.முத்துராமசாமி, ஆர்.கோதண்டபாணி உள்பட ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story