கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கில் காதலன் கைது


கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கில் காதலன் கைது
x
தினத்தந்தி 18 Dec 2017 12:15 AM GMT (Updated: 17 Dec 2017 10:11 PM GMT)

சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கில் அவரது காதலன் கைது செய்யப்பட்டார். திருமணம் செய்வதாக கூறிவிட்டு காதலன் ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

சென்னை,

சென்னை அடையாறு, வண்ணாந்துறை, எல்லையம்மன் கோவில் தெருவில் வசித்தவர் பிரமிளா (வயது 21). சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் பிரமிளா கடந்த அக்டோபர் 18-ந்தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், பிரமிளா அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசியது தெரியவந்தது. இதன்பேரில் பிரமிளா செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் பிரசாந்த் என்பவர் பிரமிளாவுக்கு அடிக்கடி செல்போனில் பேசியிருப்பது தெரிய வந்தது. வாட்ஸ்-அப் மூலமும் ஏராளமான தகவல்கள் அனுப்பியது கண்டறியப்பட்டது.

தியாகராயநகரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (23). ஐ.டி.ஐ. படித்துவிட்டு ஆட்டோ மொபைல் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். பிரமிளாவை காதலித்து உள்ளார். திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் ஆசைவார்த்தை கூறி பிரமிளாவுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

திடீரென்று அவர் பிரமிளாவை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பிரமிளா தூக்குப்போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இதையடுத்து பிரசாந்த் மீது போலீசார் பிரமிளாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். பிரசாந்த் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

Next Story