கோழி வேன் மீது மற்றொரு வேன் மோதல்; 3 பேர் சாவு


கோழி வேன் மீது மற்றொரு வேன் மோதல்; 3 பேர் சாவு
x
தினத்தந்தி 18 Dec 2017 12:04 AM GMT (Updated: 2017-12-18T05:34:17+05:30)

காவேரிப்பாக்கம் அருகே கோழி வேன் மீது மற்றொரு வேன் மோதியதில் 3 பேர் பலியானார்கள்.

பனப்பாக்கம்,

காவேரிப்பாக்கம் அருகே டயர் வெடித்ததால் கோழி பாரம் ஏற்றிச்சென்ற வேன் ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பைதாண்டி அடுத்த பக்கத்திற்கு சென்றது. அப்போது மற்றொரு வேன், மினிவேன் மீது மோதியது. இதில் 3 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

சென்னை வில்லிவாக்கம் ஆனந்தபால விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர்பாஷா (வயது 38). இவர் சொந்தமாக மினிவேன் வைத்து ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு வேனை ஓட்டிவந்த அவர் அங்கு 1,300 கோழிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார்.

அந்த வேனில் கோழிகளை ஏற்றும் தொழிலாளர்களான ராணிப்பேட்டையை சேர்ந்த தினகரன் (47), ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியை சேர்ந்த அன்வர்பாஷா (25), ஆற்காடு பகுதியை சேர்ந்த ரகமதுல்லா (27) ஆகியோரும் இருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த வேன் காவேரிப்பாக்கத்தை கடந்து வேலூர் மாவட்ட எல்லையான ஓச்சேரி அருகே பெங்களூரு– சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது மினிவேனின் பின்பக்க டயர் ‘திடீர்’ என்று வெடித்தது.

இதனால் நிலைதடுமாறிய அந்த மினிவேன் ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரையும் தாண்டி எதிர்திசையில் உள்ள ரோட்டில் பாய்ந்தது. அப்போது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வேகமாக வந்த வேன், கோழி வேனுடன் பயங்கரமாக மோதியது. இதில் கோழிபாரம் ஏற்றிய வேன் அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் கோழிகளை ஏற்றிச்சென்ற வேனில் இருந்த டிரைவர் உள்பட 4 பேரும், எதிர்திசையில் வந்த வேனை ஓட்டி வந்த டிரைவரான குடியாத்தம் அருகே உள்ள ரங்கசமுத்திரத்தை சேர்ந்த எபிநேசன் (26), செங்கல்பட்டு அருகே காட்டான்குளத்தை சேர்ந்த கிளீனர் அஜய் (18) ஆகியோரும் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவளூர் மற்றும் காவேரிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது கோழி ஏற்றிய வேனில் வந்த தினகரன், அன்வர்பாஷா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

மற்ற 4 பேரையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் அஜய்யை தவிர மற்ற 3 பேரும் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அக்பர்பாஷா இறந்து விட்டார்.

இந்த விபத்து காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் வாலாஜாவில் இருந்து கிரேனை வரவழைத்து ரோட்டில் கவிழ்ந்து கிடந்த மினிவேனை அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் போக்குவரத்தை சரி செய்தனர்.

இந்த விபத்து குறித்து அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story