உச்சிப்புளி அருகே 102 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 102 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை சுங்க துறையினர் கைது செய்தனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவது அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டுஉள்ளார். இதையடுத்து கியூ பிரிவு போலீசார், மத்திய கடலோர காவல்படையினர், கடற்கரை காவல்படை பிரிவு, தனிப்பிரிவு போலீசார் மற்றும் போலீசார் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உச்சிப்புளி அருகே நொச்சியூருணி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட உள்ளதாக ராமநாதபுரம் சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சுங்கத்துறை உதவி ஆணையர் ராஜ்குமார் மோசஸ் உத்தரவின்பேரில் சுங்க இலாகா சூப்பிரண்டுகள் முனியசாமி, பன்னீர்செல்வம், பிரேம்குமார் தலைமையிலான அதிகாரிகள் நொச்சியூருணி பகுதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் மூடையுடன் கடற்கரையில் நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர் வைத்து இருந்த மூடையில் 102 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனே அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் இதுதொடர்பாக அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அந்த வாலிபர் இருட்டூரணி கிராமத்தை சேர்ந்த கார்த்தி (வயது 27) என்பதும், கஞ்சாவை இலங்கைக்கு அனுப்புவதற்காக படகை எதிர்பார்த்து காத்திருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாலிபர் கார்த்தியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.