சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் உள்ள வணிக வளாகம்– குடியிருப்புகளுக்கான வரியை குறைக்க வேண்டும் ஆணையாளரிடம், 10 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மனு


சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் உள்ள வணிக வளாகம்– குடியிருப்புகளுக்கான வரியை குறைக்க வேண்டும் ஆணையாளரிடம், 10 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மனு
x
தினத்தந்தி 19 Dec 2017 3:15 AM IST (Updated: 19 Dec 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் உள்ள வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகளுக்கான வரியை குறைக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளரிடம் 10 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மனு கொடுத்து உள்ளனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகளுக்கான வரியை உயர்த்தி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த வரி உயர்வு 2 மடங்கில் இருந்து 4 மடங்கு உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உயர்த்தப்பட்ட வரியை செலுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட வணிக வளாக மற்றும் குடியிருப்புகளுக்கான உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் உயர்த்தப்பட்டு உள்ள வரியை குறைத்து, பழைய வரியையே வசூலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சத்தியமங்கலம் அனைத்து வியாபாரிகள் சங்கம், அனைத்து வணிகர் சங்கம், சத்தி நகை வியாபாரிகள் சங்கம், இந்திய மருத்துவர் சங்கம், சத்தி நுகர்வோர் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு உள்ளாட்சி கடை வியாபாரிகள் சங்கம், சத்தியமங்கலம் பூ மார்க்கெட், சத்தியமங்கலம் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், ஜவுளி வியாபாரிகள் சங்கம், தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் ஆகிய 10 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் நேற்று சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் அனைத்து வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் ஆடிட்டர் பி.மயில்சாமி தலைமையில், நிர்வாகிகள் பி.ஆர்.நந்தகுமார், எஸ்.என்.ஜவஹர், ராஜா, விவேகானந்தன், கே.ஆர்.மாரியப்பன், டாக்டர் தியாகு, முத்துசாமி, ஆர்.ரமணி, எஸ்.வி.வரதராஜ், கே.சி.பி.இளங்கோ ஆகியோர் நகராட்சி ஆணையாளர் சுதாவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது:–

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகளுக்கான வரி 2 மடங்கு முதல் 4 மடங்கு வரை உயர்ந்து உள்ளது. ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வியாபாரிகள் பாதிப்படைந்து உள்ளனர். மேலும் சத்தியமங்கலம் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விட்டது. இதனால் விவசாயமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக வணிகம் குறைந்து விட்டது. இந்த நிலையில் வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகளுக்கான வரியை உயர்த்தி உள்ளது எங்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மனிதாபிமானமற்ற செயல் ஆகும். எனவே உயர்த்தப்பட்ட வரியை குறைத்து பழைய வரியையே வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர் சுதா கூறுகையில், ‘இந்த வரி உயர்வு சத்தியமங்கலம் நகராட்சியில் மட்டுமே அமல்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் வரி உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே உங்கள் கோரிக்கைகள் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்,’ என்றார்.


Next Story