சாத்தூர் பஸ் நிலைய மேற்கூரை தூண்கள் சேதம் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு


சாத்தூர் பஸ் நிலைய மேற்கூரை தூண்கள் சேதம் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Dec 2017 3:45 AM IST (Updated: 19 Dec 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் பஸ் நிலைய மேற்கூரைகள் சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ளன. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

சாத்தூர்,

கன்னியாகுமரி–மதுரை 4 வழிச்சாலையில் உள்ள சாத்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பஸ்கள் வந்து செல்கிறது. ஆனால் இங்குள்ள பஸ் நிலையம் போதிய அடிப்படை வசதி இன்றி இருக்கிறது. பஸ் நிலையத்தில் உள்ள கடைகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் நகராட்சி நிர்வாகம் அதனை சரி செய்ய முன் வரவில்லை.

நகராட்சி பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மூலம் ஒரு குறிப்பிட்டதொகை மாதந்தோறும் நகராட்சிக்கு வருமானமாக வந்து கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் இந்த வாடகையை அதிக அளவில் உயர்த்தி அறிவித்தது. ஆனால் பஸ் நிலையத்தில் சேதம் அடைந்த கடைகளை சீரமைக்க எந்த நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் எடுக்க வில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

பஸ் நிலைய மேற்கூரைகளை தாங்கி நிற்கும் இரும்பு தூண்கள் சேதம் அடைந்து பல மாதங்கள் ஆகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் பல முறை சுட்டிக்காட்டியும் அந்த தூண்களை மாற்றி அமைக்கவோ, சரி செய்யவோ அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

பஸ் நிலையத்துக்குள் வரும் பஸ்களுக்கு கட்டணம் வசூல் நடக்கிறது. ஆனால் பயணிகளுக்கு பொதுசுகாதார வளாக வசதியோ, குடிநீர் வசதியோ, இருக்கை வசதியோ செய்து கொடுக்கப்படவில்லை. வருமானம் மட்டும் எதிர் பார்க்கும் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் ஏனோ தயக்கம் காட்டுகிறது.

இங்குள்ள தாய் பால் ஊட்டும் அறையும் திறக்கப் படாமல் இருக்கிறது. எனவே அதிகாரிகள் பஸ் நிலையத்தை ஆய்வு செய்து அங்குள்ள குறைபாடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story