புயலால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரில் சந்திப்பு: பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை


புயலால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரில் சந்திப்பு: பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை
x
தினத்தந்தி 19 Dec 2017 4:45 AM IST (Updated: 19 Dec 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி வருகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி,

‘ஒகி‘ புயல் மற்றும் கனமழையால் குமரி மாவட்டம் பலத்த சேதம் அடைந்தது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்தன. நெல், வாழை, தென்னை, ரப்பர், மிளகு, மரச்சீனி உள்ளிட்ட பயிர்கள் புயலால் பெருமளவு சேதம் அடைந்தன.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஏராளமானோர் புயல் காற்றில் சிக்கினார்கள். நடுக்கடலில் மாயமான நூற்றுக்கணக்கான மீனவர்கள் என்ன ஆனார்கள்? என்று தெரியாத நிலை இருந்து வருகிறது.

புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அரசு சார்பில் நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளும் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் ‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரி வருகிறார்.

முன்னதாக மங்களூரில் இருந்து லட்சத்தீவுக்கு சென்று புயல் சேதங்களை பார்வையிடுகிறார். தொடர்ந்து, திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு புறப்படுகிறார். கன்னியாகுமரியில் அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் பிற்பகல் 2.30 மணி அளவில் வந்திறங்குகிறார்.

பிரதமர் மோடியை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். அதன்பிறகு மோடி, அரசு விருந்தினர் சுற்றுலா மாளிகையில் உள்ள கூட்ட அரங்குக்கு வருகிறார்.

‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், விவசாயிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேசி ஆறுதல் கூறுகிறார். இந்த சந்திப்பின் போது மீனவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பிரதமர் நரேந்திரமோடி மனுக்களை பெறுகிறார்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின்பு மீண்டும் அவர் ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் செல்கிறார்.

கேரளாவில் திருவனந்தபுரம் உள்பட கடலோர பகுதிகளில் ‘ஒகி‘ புயலால் ஏராளமான மீனவர்கள் மாயமாகி உள்ளனர். எனவே புயலால் பாதிக்கப்பட்ட திருவனந்தபுரம் அருகே பூந்துறை பகுதியை சேர்ந்த மீனவர்களை பிரதமர் மோடி மாலை 5 மணி அளவில் சந்திக்கிறார்.

பூந்துறை புனித தாமஸ் பள்ளியில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து கேரள கவர்னர் மாளிகைக்கு சென்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அதை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 6 மணி அளவில் மோடி புறப்பட்டு, டெல்லிக்கு செல்கிறார்.

பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்கள் மூலமும், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களைக் கொண்டும், மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலமும் தீவிர சோதனை நடந்து வருகிறது. இதே போல் பகவதி அம்மன் கோவிலிலும் சோதனை நடந்தது. ஹெலிகாப்டர் தளம், மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்திக்கும் அரங்கத்திற்கு செல்லும் பாதை உள்ளிட்ட பகுதிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் கன்னியாகுமரிக்கு வந்தார். பின்னர் அவர் ஹெலிகாப்டர் தளம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வந்து தரை இறங்கும் ஒத்திகை நிகழ்ச்சி ற்ே-று நடந்தது. அதை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

கன்னியாகுமரியில் உள்ள அனைத்து விடுதிகளின் அறைகளில் தங்கி இருப்பவர்கள் பற்றியும் தகவல் சேகரிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நாற்கரசாலை, கடற்கரை பகுதிகள் அனைத்தும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

Next Story