விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் தப்பின


விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் தப்பின
x
தினத்தந்தி 19 Dec 2017 4:30 AM IST (Updated: 19 Dec 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறில் பாவாடை மூர்த்தி விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செய்யாறு,

செய்யாறு டவுனில் பிரசித்தி பெற்ற பாவாடை மூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக இக்கோவிலில் வழிபட்டு வரும் அப்பகுதி மக்கள் விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

5 மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் திறந்து எண்ணப்படும்போது ரூ.60 ஆயிரம் வரை இருக்கும். சமீபகாலமாக 3 மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. அதன்படி இம்மாத இறுதியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகளை இந்து அறநிலையத்துறையினர் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் விநாயகருக்கு பூஜை முடித்தபின்னர், துப்புரவு பணியாளர் குமாரி கோவிலை பூட்டிக்கொண்டு சென்றார்.

மீண்டும் நேற்று அதிகாலை மார்கழி மாத பூஜைக்காக கோவில் கதவினை குமாரி திறந்த போது மூலவருக்கு எதிரே வைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கோவில் சுற்றுச்சுவரின் வழியாக உள்ளே நுழைந்து அங்கிருந்த இரும்பு கதவின் பூட்டை உடைந்து கோவிலுக்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். பின்னர் கோவில் உண்டியலில் இருந்த அலார மணியின் இணைப்பை துண்டித்து, உண்டியல் பூட்டை உடைத்து பணத்தினை திருடி உள்ளனர் என்பது தெரிய வந்தது.

மேலும் கோவிலில் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஐம்பொன்னால் ஆன 2 அடி உயர முருகர் சிலை, 1½ அடியில் வள்ளி, தெய்வானை சிலைகள் மற்றும் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த சிலைகள் உள்ள அறையின் பூட்டை உடைத்தும், அங்கிருந்த அலார மணியின் இணைப்பையும் மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர். ஆனால் சிலைகள் திருட்டு போகவில்லை.

இதனால் பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் தப்பியதாக அறங்காவலர் குழுவினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் அழகர்மலை கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story