கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புகொடி ஆர்ப்பாட்டம்


கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புகொடி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2017 11:00 PM GMT (Updated: 18 Dec 2017 9:22 PM GMT)

கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் தி.மு.க.வினர் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்,

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அங்கு ஆய்வு செய்வதுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வேன் என்று கவர்னர் அறிவித்தார். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று காலை சேலத்திற்கு வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். கவர்னரின் இந்த ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகம் அருகே சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. பொருளாளர் சுபாஷ் தலைமையில் தி.மு.க.வினர் பலர் கைகளில் கருப்புகொடியுடன் திரண்டு வந்தனர்.

தி.மு.க.வினருக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையிலும் ஏராளமானவர்கள் கையில் கருப்புகொடியை ஏந்தி வந்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது கவர்னரின் வருகைக்கும் மற்றும் ஆய்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மேயர் சூடாமணி, துணை செயலாளர் ரகுபதி, பொருளாளர் ஷெரீப் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தி.மு.க. சேலம் மத்திய மாவட்ட பொருளாளர் சுபாஷ் நிருபர்களிடம் கூறும்போது, “மத்திய, மாநில அரசுகளுக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது என்பது குறித்து சட்டமேதை அம்பேத்கர் வரைமுறைப்படுத்தி உள்ளார். ஆனால் அதை மீறி தமிழக கவர்னர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் மட்டும் தான் கவர்னர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மற்ற மாநிலங்களில் இதுபோன்று கவர்னர்கள் ஆய்வு செய்வதில்லை. மத்திய அரசின் ஏவலாக அவர் செயல் படுகிறார். இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் முதலில் கவர்னர் ஆய்வு செய்துவிட்டு பின்னர் மற்ற பகுதிகளுக்கு செல்லட்டும்” என்றார். 

Next Story