ரூ.40 லட்சத்துடன் தலைமறைவான நகைக்கடை ஊழியர் கைது உத்தரபிரதேசத்தில் சிக்கினார்
ரூ.40 லட்சத்துடன் தலைமறைவான நகைக்கடை ஊழியரை போலீசார் உத்தரபிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.
மும்பை,
மும்பை ஒஷிவாரா லோகண்ட்வாலாவில் நகைக்கடை நடத்தி வருபவர் பிரவின் ஜெயின். இவரது கடையில் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்த அங்குர் துபே(வயது19) என்ற வாலிபர் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி பிரவின் ஜெயின் கோரேகாவை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து விட்டு வரும்படி ரூ.40 லட்சத்தை ஊழியர் அங்குர் துபேயிடம் கொடுத்து அனுப்பினார்.
ஆனால் அங்குர் துபே குறிப்பிட்ட அந்த நபரிடம் சென்று பணத்தை கொடுக்கவில்லை. மேலும் பணத்துடன் நகைக்கடைக்கும் திரும்பவில்லை.
கைது
இதற்கிடையே அங்குர் துபே பணத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் பதறிப்போன பிரவின் ஜெயின் இது குறித்து ஒஷிவாரா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், அங்குர் துபே உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.34 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர் மும்பை அழைத்து வரப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
Related Tags :
Next Story