‘எனது கணவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’
ராஜஸ்தான் மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது மனைவி பானுரேகா கூறினார்.
பனவடலிசத்திரம்,
ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சாலைபுதூரில் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் எனது கணவர் பெரியபாண்டியனும் இருந்தார். கொள்ளையர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் எனது கணவர் மற்றும் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் 3 போலீசார் ராஜஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அங்கு கொள்ளையர்களுடன் நடந்த சண்டையில் எனது கணவர் கொள்ளையரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் முதலில் தெரிவித்தனர்.
கொள்ளையர்களுடன் நடந்த சண்டையின்போது தனது துப்பாக்கி தவறி கீழே விழுந்து விட்டதாகவும், அதனை பெரியபாண்டியன் எடுத்து வைத்திருந்தபோது கொள்ளையன் நாதுராம், துப்பாக்கியை பிடுங்கி சுட்டதில் பெரியபாண்டியன் இறந்து விட்டதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் ராஜஸ்தான் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
ஆனால் ராஜஸ்தான் போலீசார் நடத்திய கைரேகை ஆய்வில், எனது கணவர் சுடப்பட்ட துப்பாக்கியில் பதிந்து இருந்த ரேகைகள் இன்ஸ்பெக்டர் முனிசேகருக்கு உரியது என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் முனிசேகர், கொள்ளையர்களை நோக்கி பாதுகாப்புக்காக தான் சுட்டதில்தான் தனது ரேகை துப்பாக்கியில் பதிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் எனது கணவர் 13–ந் தேதி அதிகாலை 2.30 மணிக்கு இறந்துள்ளார். காலை 7 மணிக்கு பிறகு தொலைக்காட்சியில் பார்த்துதான் இதனை தெரிந்து கொண்டோம். போலீசார் எந்த தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை. போலீசாரின் பேச்சு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.
எனவே எனது கணவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தி உண்மை நிலையை எங்களது குடும்பத்துக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.