விடியலை தேடி மீனவர்கள்!


விடியலை தேடி மீனவர்கள்!
x
தினத்தந்தி 19 Dec 2017 3:51 PM IST (Updated: 19 Dec 2017 3:51 PM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலம் மற்றும் குமரி மாவட்டத்தை நிலைகுலைய செய்த ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (டிசம்பர் 19) மோடி பார்வையிடுகிறார்.

உறவுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் மீனவ குடும்பங்களும், வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளும் குமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி ஏதாவது நல்ல செய்தியை அறிவிக்க மாட்டாரா? என ஏங்கி, எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

ஏனென்றால், நவம்பர் மாத இறுதியில் சுழன்றடித்த ஒகி புயல் ஏற்படுத்திய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இன்னமும் மீனவர்கள் மீளவில்லை. தன் தந்தையை காணாமல் துடிக்கும் பிள்ளைகள், கணவன்மார்களை இழந்து தவிக்கும் மனைவிகள், பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் என குமரி மாவட்டத்தின் சோக கதை இன்னும் நீள்கிறது.

மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நீதிபதி, போலீஸ் உயர் அதிகாரிகள் என பலரும் மீனவர்களை சந்தித்தது, கட்டுப்பாட்டு மையங்களை திறந்தது சற்றே ஆறுதல் தந்தது. இதே போல, இறுதியாக பலியானோர் என அடையாளம் காணப்பட்டோரின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம், அரசு வேலை என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததும் சற்று ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. ஆனால், இதுவரை கரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்தினரின் வேதனையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் காணாமல் போனால் 7 ஆண்டுகள் கழித்தும் அவர் பற்றி தகவல் கிடைக்காத பட்சத்தில் தான் அவரை இறந்துவிட்டதாக அறிவிக்க முடியும் என்று இந்திய சாட்சிய சட்டம் - 1872 (பிரிவு-108) சொல்கிறது. ஆனால், இதில் உடனடியாக திருத்தத்தை கொண்டுவந்து, மாயமான மீனவர்கள் இம்மாத இறுதிக்குள் திரும்பாவிட்டால் அவர்களையும் இறந்தவர்களாக அறிவிக்க வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கும் ரூ.20 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது மட்டுமல்லாது, ஆழ்கடலில் மூழ்கிய படகுகளுக்கும், மீன்பிடி உபகரணங்களுக்கும் பதிலாக நிவாரணம் வழங்க வேண்டும். அப்படியென்றால்தான் உடமை இழந்து உயிர் தப்பிய பல மீனவ குடும்பங்களுக்கு புதுவிடியல் பிறக்கும். மேலும், ஒகி புயலுக்கு முன்பு இவர்கள் பெற்ற அத்தனைவகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், 2009-ம் ஆண்டு பியான் என்ற பெயரிலும், 2013-ல் பைலின் என்ற பெயரிலும் சுழன்றடித்த புயலில் சிக்கி உயிரை, உடமைகளை இழந்த குடும்பங்களுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகள், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடமும் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 11-ந்தேதி கேரள கடற்பகுதியில் இம்மானுவேல் என்ற விசைப்படகை மோதி மூழ்கடித்ததன் மூலம் படகின் உரிமையாளர் அந்தோணி சாவுக்கும், 3 மீனவர்கள் மாயமாகி போனதற்கும் காரணமாக இருந்த கப்பலை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வித ஆதரவுமின்றி வாடும் அந்த 4 மீனவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் காக்கவும் அரசு நிதி உதவி செய்ய வேண்டும். இதுதொடர்பாக கேரள மீன்வளத்துறை மந்திரியை நேரில் சென்று முன்வைத்த கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லாகி போனது. இதற்கு நமது மாநில அரசு முறையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இதே போல, தமிழகத்தை சேர்ந்த 15 மீனவர்கள் (கன்னியாகுமரி-8, நெல்லை-5, தூத்துக்குடி-2) துபாயில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி மீன்பிடிக்க சென்றபோது எல்லை தாண்டியதாக ஈரான் படையினர் கைது செய்துள்ளனர். போதிய உணவின்றி, உடல்நலம் குன்றிய நிலையில் காணப்படும் அந்த மீனவர்கள் மீண்டும் துபாய் செல்ல விரும்பவில்லை. மத்திய அரசு தங்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்தியில் மீனவர்களுக்கென தனிஅமைச்சகம் அமைப்போம்“ என பா.ஜ.க. தலைவர்கள் பேசினர். ஆட்சியும் அமைந்தாயிற்று. ஆனால், அறிவிப்பு என்னாயிற்று? ஆயுர்வேதா, யுனானி, சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவத்துக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதே போல, அறிவித்ததை செய்துகாட்ட மீனவர்களுக்கென தனி அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கும் என்ற மீனவர்களின் நம்பிக்கை காப்பாற்றப்பட வேண்டும்.

இத்துடன், மீனவர்கள் இந்தியாவின் எப்பகுதியிலும் சென்று சுதந்திரமாக மீன்பிடிக்கவும், அனைத்து துறைமுகங்களிலும் மீன்களை விற்கவும், எரிபொருள் நிரப்பவும், இதற்கு உறுதுணையாக ஒருங்கிணைந்த தேசிய மீன்பிடிக்கொள்கையும் வரையறுக்கப்பட வேண்டும். குமரி மாவட்டத்துக்கு பேரழிவை தந்த ‘ஒகி’ புயல் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். அதுதான் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் புதுவாழ்வில் வசந்தத்தின் வாசலை திறந்ததை போல இருக்கும்.

‘எத்தகைய துயரங்கள், சோதனைகள் வரினும் தாய் பறவை தனது குஞ்சுகளை காப்பதுபோல, உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்றான நம் பாரதத்தின் பிரதமர் மோடி தாயுள்ளத்தோடு எங்களையும் காப்பார்’ என்று ஒகி புயலினால் பாதிக்கப்பட்ட இம்மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு உள்ளனர். எதிர்காலம் செழிக்க உடனடியாக உதவ வேண்டுமென்பதே இந்த பாரத பிரஜைகளின் அவா.

ப.ஜஸ்டின் ஆண்டனி, சர்வதேச மீனவர் வளர்ச்சி அமைப்பு தலைவர்

Next Story