நித்யானந்தா மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது? மதுரை ஐகோர்ட்டு கேள்வி


நித்யானந்தா மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 20 Dec 2017 4:30 AM IST (Updated: 20 Dec 2017 12:19 AM IST)
t-max-icont-min-icon

‘மதுரை ஆதீன மடத்தின் 293–வது மடாதிபதி என்று கூறி வரும் நித்யானந்தா மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மதுரை,

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ஜெகதலபிரதாபன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

மதுரை ஆதீன மடத்தின் 292–வது ஆதீனமாக அருணகிரிநாதர் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார். சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ராஜசேகர் என்ற நித்யானந்தா, தன்னை மதுரை ஆதீனம் மடத்தின் 293–வது மடாதிபதியாக 2012–ம் ஆண்டில் பிரகடனப்படுத்தி கொண்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய கோர்ட்டு தடை விதித்தது.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவுகளை மறைத்து சட்டத்துக்கு புறம்பாக ஆதீன மடத்தையும், அதன் விலை மதிப்பு இல்லா சொத்துகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆதீன மடத்துக்குள் செல்வதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி நித்யானந்தா, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவருக்கு அனுமதி வழங்கினால் தேவையில்லாத சர்ச்சைகளும், சட்டம்–ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய இடைக்கால தடை விதித்து கடந்த அக்டோபர் 11–ந் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘292–வது ஆதீனம் உயிருடன் இருக்கும்போது 293–வது ஆதீனம் என்று பதில் மனுவில் எப்படி குறிப்பிடலாம்? இதற்காக ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது? ஆதீன மடத்தின் 293–வது ஆதீனம் என்று நித்யானந்தா தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியதை திரும்பப்பெற்று, புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது நித்யானந்தா தரப்பில் ஆஜரான வக்கீல், ‘293–வது ஆதீனம் என்ற வார்த்தையை திரும்பப்பெற்றுவிட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 3–ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story