மேட்டூர் ரவுடி கொலையில் மோகனூர் அருகே 6 பேர் சிக்கினர்


மேட்டூர் ரவுடி கொலையில் மோகனூர் அருகே 6 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 20 Dec 2017 4:30 AM IST (Updated: 20 Dec 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் ரவுடி கொலையில் தேடப்பட்ட 6 பேர் மோகனூர் அருகே சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோகனூர்,

மேட்டூரில் நேற்று மதியம் தாபா ஓட்டலில் சாப்பிடச்சென்ற ரவுடி அமிர்தலிங்கம் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த நண்பர் முரளிக்கும் வெட்டு விழுந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் ஒரு காரில் ஏறி தப்பிச்சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டூர் போலீசார் அங்கு விரைந்து வந்து கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள சோதனைச்சாவடியில் மாலை 5 மணியளவில் காரை நிறுத்தாமல் மர்ம கும்பல் தப்பிச்சென்றன. இதுபற்றி தகவல் அறிந்த பரமத்தி நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர். இதனால் பரமத்தி அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் பகுதியில் அவர்கள் காரை நிறுத்தினர். காரில் இருந்து 6 பேர் இறங்கி தப்பி ஓடினார்கள்.

இவர்களில் வேல்முருகன், மாரிச்செல்வம் ஆகியோரை போலீசார் பிடித்தனர். ஆனால், மற்ற 4 பேரும் போலீசாரை ஏமாற்றிவிட்டு பரமத்திவேலூர் காமாட்சி நகர் அருகே அந்த வழியாக மோகனூர் சென்ற தனியார் பஸ்சில் ஏறி தப்பினார்கள். ஆனால், பின்தொடர்ந்து சென்ற போலீசார் மோகனூரில் 2 பேரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் கருப்பசாமி (வயது 32), முனியாண்டி என்பவரின் மகன் பாரதிராஜா (24) என்பது தெரியவந்தது. கருப்பசாமி கையில் ஏற்பட்ட வெட்டு காயத்துக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது 2 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர்.

இதையடுத்து தப்பி ஓடிய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடினார்கள். ஆனால், அவர்கள் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி சென்ற இன்னொரு பஸ்சில் ஏறி தப்பிச்சென்றனர். இதுபற்றி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், மோகனூர் அருகே உள்ள பாலப்பட்டியில் போலீசார் அந்த பஸ்சை நிறுத்தி 2 பேரையும் பிடித்தனர். விசாரணையில், அவர்களது பெயர் சதீஸ், நடராஜ் என்பது தெரியவந்தது.

பிடிபட்ட 6 பேரையும் போலீசார் இரவில் சேலம் மாவட்டத்துக்கு அழைத்து வந்தனர். இங்கு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை வழக்கில் தப்பிச்சென்ற 6 பேரை போலீசார் விரட்டிச்சென்று பிடித்ததால் பரமத்திவேலூர் மற்றும் மோகனூர் பகுதியில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது. 

Next Story