கோமதேஸ்வரர் சிலைக்கு மகாமஸ்தகாபிஷேகம்: யஷ்வந்தபுரம்–சரவணபெலகோலா இடையே சிறப்பு ரெயில்கள்


கோமதேஸ்வரர் சிலைக்கு மகாமஸ்தகாபிஷேகம்: யஷ்வந்தபுரம்–சரவணபெலகோலா இடையே சிறப்பு ரெயில்கள்
x
தினத்தந்தி 20 Dec 2017 2:00 AM IST (Updated: 20 Dec 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் உள்ள கோமதேஸ்வரர் சிலைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மகாமஸ்தகாபிஷேகம் நடைபெற உள்ளது.

பெங்களூரு,

ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் உள்ள கோமதேஸ்வரர் சிலைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மகாமஸ்தகாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, பெங்களூரு யஷ்வந்தபுரம்–சரவணபெலகோலா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன என்று தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரெயில்கள்

ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் கோமதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருக்கும் 52 அடி உயர கோமதேஸ்வரர் சிலைக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமஸ்தகாபிஷேகம் நடைபெறும். அதன்படி, அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் கோமதேஸ்வரர் சிலைக்கு மகாமஸ்தகாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக இருமார்க்கமாக பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் இருந்து சரவணபெலகோலாவுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. விழா நடைபெறும் பிப்ரவரி மாதம் 7–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை இந்த சிறப்பு ரெயில்கள் இயங்க உள்ளன.

புறப்படும் நேரம்

அதன்படி, பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் இருந்து சரவணபெலகோலாவுக்கு அதிகாலை 5.15 மணி, காலை 6.20 மணி, மதியம் 2 மணி மற்றும் மாலை 3.45 மணிக்கு சிறப்பு ரெயில்கள் (வண்டிஎண்:06551/06559/0655/06563) புறப்பட்டு செல்ல உள்ளன.

மறுமார்க்கமாக, ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் இருந்து பெங்களூரு யஷ்வந்தபுரத்துக்கு காலை 10.40 மணி, மதியம் 12 மணி, இரவு 7.20 மணி, இரவு 9 மணிக்கு சிறப்பு ரெயில்கள் (06552/06560/06556/06564) இயக்கப்படுகின்றன.

இருமார்க்கமாக பெங்களூரு யஷ்வந்தபுரம்–சரவணபெலகோலா இடையே இயங்கும் சிறப்பு ரெயில்கள் சிக்கபானவாரா, நெலமங்களா, குனிகல், எடியூர், பி.ஜி.நகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மீரஜ்–ஹாசன் சிறப்பு ரெயில்

இதேபோல், மகாமஸ்தகாபிஷேகத்தையொட்டி இருமார்க்கமாக மீரஜ்–ஹாசன் இடையே சிறப்பு ரெயில்கள் (07333/07334) இயங்க உள்ளன. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19–ந் தேதி மீரஜில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07333) மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு ஹாசனை வந்தடையும். மறுமார்க்கமாக, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20–ந் தேதி ஹாசனில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07334) மறுநாள் காலை 10.15 மணிக்கு மீரஜை சென்றடையும்.

அத்துடன், பயணிகளின் வசதிக்காக இருமார்க்கமாக உப்பள்ளி–மீரஜ் இடையே சிறப்பு ரெயில்கள் (07331/07332) இயக்கப்பட உள்ளன. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19–ந் தேதி உப்பள்ளியில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07331) மதியம் 1.40 மணிக்கு மீரஜை சென்றடையும். மறுமார்க்கமாக, 21–ந் தேதி மீரஜில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07332) மாலை 6.45 மணிக்கு உப்பள்ளியை சென்றடையும்.

யஷ்வந்தபுரம்–பெலகாவி சிறப்பு ரெயில்

அதேபோல், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இருமார்க்கமாக பெங்களூரு யஷ்வந்தபுரம்–பெலகாவி இடையே தட்கல் சிறப்பு ரெயில்கள் (06581/06582) இயங்க உள்ளன. அதன்படி, வருகிற 22–ந் தேதி இரவு 8.15 மணிக்கு யஷ்வந்தபுரத்தில் இருந்து புறப்படும் தட்கல் சிறப்பு ரெயில் (06581) மறுநாள் காலை 8.10 மணிக்கு பெலகாவியை சென்றடையும். மறுமார்க்கமாக, வருகிற 25–ந் தேதி இரவு 7.10 மணிக்கு பெலகாவியில் இருந்து புறப்படும் தட்கல் சிறப்பு ரெயில் (06582) மறுநாள் காலை 6.20 மணிக்கு யஷ்வந்தபுரத்தை சென்றடைய உள்ளது.

மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இருமார்க்கமாக பெங்களூரு யஷ்வந்தபுரம்–வாஸ்கோடகாமா இடையே சுவிதா சிறப்பு ரெயில்கள் (82665/82666) இயங்க உள்ளன. அதன்படி, வருகிற 29–ந் தேதி யஷ்வந்தபுரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரெயில் (82665) மறுநாள் காலை 11.15 மணிக்கு வாஸ்கோடகாமாவை சென்றடையும். மறுமார்க்கமாக, ஜனவரி மாதம் 2–ந் தேதி வாஸ்கோடகாமாவில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (82666) மறுநாள் காலை 11.50 மணிக்கு யஷ்வந்தபுரத்தை வந்தடையும்.

மேற்கண்ட தகவல் தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story