தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும்


தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 20 Dec 2017 2:30 AM IST (Updated: 20 Dec 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மந்திரி பிரியங்க் கார்கே வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மந்திரி பிரியங்க் கார்கே வலியுறுத்தி உள்ளார்.

வாக்குப்பதிவு எந்திரங்களில் சந்தேகம்

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்–மந்திரி சித்தராமையா உள்பட கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள், வாக்குப்பதிவு எந்திரங்களில் சந்தேகம் உள்ளதாகவும், கர்நாடக சட்டமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வலியுறுத்துவோம் என்றும் கூறினர். இந்த நிலையில் கர்நாடக சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி பிரியங்க் கார்கேவும் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக மந்திரி பிரியங்க் கார்கே கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

சோதனைக்கு உட்படுத்த வேண்டும்

வாக்குப்பதிவு எந்திரங்களின் உண்மை தன்மை குறித்து சந்தேகங்கள் எழுகின்றன. பல்வேறு கட்சிகளும் இந்த சந்தேகத்தை எழுப்புகின்றன. தகவல் தொழில்நுட்பத்துறையின் தலைநகரமாக பெங்களூரு திகழ்கிறது. இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று சொல்லப்படும் பெங்களூருவில் 500–க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கின்றன.

வாக்குப்பதிவு எந்திரங்களை பெங்களூருவில் உள்ள அந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள் மூலம் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதன் மூலம் சந்தேகங்கள் நீங்கும். இதை ஏன் செய்யக்கூடாது?. தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.

தவறுகள் இருந்தால்...

நாம் அனைவரும் சேர்ந்து இந்த எந்திரங்களில் எழும் சந்தேகங்களை நேர்மையான முறையில் போக்குவோம் என்பது தான் எனது கருத்து. அந்த எந்திரங்களை தொழில்நுட்ப ரீதியாக திறப்போம். அதில் ஏதாவது தவறுகள் இருந்தால் அவற்றை சரிசெய்வோம்.

இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.


Next Story