தூத்துக்குடியில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
தூத்துக்குடியில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி தெர்மல்நகர் காதர்மீரான் நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 29) லாரி டிரைவர். இவருக்கும் பிரேமலதா (26) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கணவன்– மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும், அப்போது பிரேமலதாவின் தாய் வள்ளி, அவர்களை சமாதானம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட பிரேமலதா கடந்த 17–ந் தேதி இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தெர்மல்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் முடிந்து 6 ஆண்டுகளே ஆனதால், இந்த தற்கொலை சம்பவம் குறித்து தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.