பிரதான குழாயில் இருந்து அனுமதியின்றி குடிநீர் எடுத்த இணைப்புகள் துண்டிப்பு அதிகாரிகள் நடவடிக்கை


பிரதான குழாயில் இருந்து அனுமதியின்றி குடிநீர் எடுத்த இணைப்புகள் துண்டிப்பு அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Dec 2017 4:15 AM IST (Updated: 21 Dec 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

சிக்கம்பட்டி அருகே பிரதான குழாயில் இருந்து அனுமதியின்றி குடிநீர் எடுத்த இணைப்புகள் துண்டிப்பு அதிகாரிகள் நடவடிக்கை

ஓமலூர்,

ஓமலூரை அடுத்த சிக்கம்பட்டி அருகே உள்ள மங்கானூர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் குடிநீர் தேவைக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்தேக்கதொட்டி கட்டப்பட்டது. இந்த நிலையில் நீர்தேக்க தொட்டிக்கு வரும் பிரதான குழாயில் இருந்து ஊராட்சி அனுமதியின்றி மோட்டார் வைத்து சிலர் திருட்டுத்தனமாக குடிநீர் எடுத்து வந்தனர். இதனால் மேல்நிலை நீர்தேக்கதொட்டிக்கு தண்ணீர் ஏறாமல் இருந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் பலமுறை ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த வாரம் கலெக்டரின் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

இதையடுத்து அனுமதியின்றி போடப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்க கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார். அதையொட்டி நேற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர்கள் ராதிகா, ரமேஷ், ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை, ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி குடிநீர் எடுத்த இணைப்புகளை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் துண்டிக்க நடவடிக்கை எடுத்தனர். அப்போது அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அனுமதியின்றி போடப்பட்டு இருந்த 7 குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. 

Next Story