ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கித்தவிக்கும் பெரிய ஏரி கால்வாய் தூர்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்


ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கித்தவிக்கும் பெரிய ஏரி கால்வாய் தூர்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Dec 2017 4:15 AM IST (Updated: 21 Dec 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

வேட்டவலம் பெரிய ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கியுள்ளது. எனவே நீர்வரத்து கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனவிவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வேட்டவலம்,

திருவண்ணாமலை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாக விளங்கும் வேட்டவலத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி 155 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் மதகு வழியாக வெளியேறும் தண்ணீர் மூலம் 80 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. இந்த ஏரியின் முக்கிய நீராதாரமாக விழுப்புரம் மாவட்டம் பழவலம் பகுதியில் உள்ள முனைப்பா ஏரி விளங்குகிறது.

வேட்டவலம் ஏரி நிரம்பினால் அங்கிருந்து வெளியேறும் உபரிநீர் நாரையூர், அகரம், சின்னஓலைப்பாடி, பெரியஓலைப்பாடி, பன்னீயூர், ஆங்குணம், ஆனானந்தல், மதுராம்பட்டு, சொரத்தூர், வைப்பூர் வழியாக வீரபாண்டி பகுதிகளில் உள்ள ஏரிகளை நிரப்புகிறது. இதன் மூலம் 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

பழவலம் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரானது வேட்டவலம் பெரிய ஏரிக்கு வருவதற்காக பாண்டிய மன்னர்கள் காலத்திலேயே இருவாமடை என்ற கால்வாய் கட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தால் கால்வாய் சுவர் இடிந்து பராமரிப்பின்றி போனது. இதனால் ஏரியின் உபரி நீர் பாக்கம் மற்றும் சத்தியமங்கலம் பகுதி வழியாக சென்று உபயோகம் இல்லாமல் கடலில் கலக்கிறது.

மேலும் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரிய மலையிலிருந்தும், ஜமீன்மலையிலிருந்தும் வரும் மழைநீர் பெரிய ஏரியில் கலந்து நிரம்புவது வழக்கம். ஆனால் கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததோடு ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதால் ஏரிக்கு நீர் வருவது அரிதாக உள்ளது.

அது ஒரு புறமிருக்க பேரூராட்சி நிர்வாகமே நகரில் சேரும் குப்பைகளை டிராக்டர் மூலமாக எடுத்துச்சென்று ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கொட்டுகிறது. மேலும் கழிவுகள், தேவையில்லாத ஓடுகள், வீடுகளில் உள்ள பழைய செங்கல் மற்றும் கட்டிட கற்களை ஏரியின் நீர்வரத்து முகதுவாரத்தில் கொட்டப்பட்டுள்ளது. அதேபோல் பல ஆண்டுகளுக்கு முன் கிரானைட் கற்களின் கழிவுகள் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் போடப்பட்டு மலைபோல் குவிந்துள்ளது.

இதனால் அதிக மழை பெய்தும் பெரிய ஏரிக்கு நீர்வருவது தடைபடுகிறது. இது குறித்து விவசாயிகள் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர்களிடம் இருவாமடை கால்வாய் பகுதியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் விவசாயிகளே இருவாமடை கால்வாயை மணல் மூட்டை அடுக்கி உடைந்த கால்வாயை தற்காலிமாக சரி செய்கிறார்கள். ஆனால் உபரி நீர் அதிகரிக்கும் போது மணல் மூட்டைகள் அடித்து சென்றுவிடுகிறது.

எனவே போர்க்கால அடிப்படையில் இந்த கால்வாயை சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story