சிலைகள் கடத்தல் வழக்கு: சுபாஷ்சந்திரகபூருக்கு வருகிற 3-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு கோர்ட்டு உத்தரவு


சிலைகள் கடத்தல் வழக்கு: சுபாஷ்சந்திரகபூருக்கு வருகிற 3-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 Dec 2017 4:00 AM IST (Updated: 21 Dec 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

சிலைகள் கடத்தல் வழக்கில் கைதான சுபாஷ் சந்திரகபூருக்கு வருகிற 3-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டது.

கும்பகோணம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சித்தமல்லியில் உள்ள வரதராஜபெருமாள் கோவில், ஸ்ரீபுரந்தானில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், பழுவூரில் உள்ள சிவன்கோவில், நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் மூன்றீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் இருந்து சாமி சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அமெரிக்காவை சேர்ந்த சுபாஷ்சந்திரகபூரை கைது செய்தனர். இந்த 4 கோவில்களிலும் நடந்த சிலை கடத்தல் தொடர்பான வழக்கு கும்பகோணம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று சுபாஷ்சந்திரகபூரை கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது சுபாஷ்சந்திரகபூரின் காவலை அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தர விட்டார்.

அதே போல நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூர் மூன்றீஸ்வரர் கோவிலில் இருந்து துவார பாலகர் சிலைகள் கடத்தப்பட்டு, அவை மும்பை வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மும்பையை சேர்ந்த வல்லபபிரகாஷ், அவரது மகன் ஆதித்தியா பிரகாஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் திருச்சி சிறையில் உள்ள வல்லப பிரகாஷ், ஆதித்தியா பிரகாஷ் ஆகிய 2 பேரிடம் காணொலிக்காட்சி மூலமாக கும்பகோணம் நீதிபதி விசாரணை நடத்தினார். பின்னர் 2 பேர் மீதான காவலை அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் எமலிங்கம் கோவில் அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை, திவ்யநாதன் (60) உள்பட 7 பேர் கொண்ட கும்பல் விற்க முயன்றது. அப்போது அங்கு மறைந்திருந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், திவ்யநாதன் உள்பட 7 பேரையும் கைது செய்தனர். இந்தநிலையில் திவ்யநாதனின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று கும்பகோணம் கோர்ட்டில் நடந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, திவ்யநாதனை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.

மேலும் ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் ஈரோட்டை சேர்ந்த கஜேந்திரன் (48), சந்திரசேகரன் (50), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மணிராஜ் (50) ஆகியோர் திருச்செங்கோடு பகுதி சிவன் கோவிலில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட மரகதலிங்கம், மரகதநந்தி சிலையை விற்க முயன்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கைதாகி சிறையில் உள்ள மணிராஜின், ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று கும்பகோணம் கோர்ட்டில் நடந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டார். 

Next Story