நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி: கைதான இயக்குனர் ஜெயிலில் அடைப்பு
நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைதான இயக்குனர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த மத்தம்பாலையில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிதி நிறுவனத்தை நிர்மலன் என்பவர் நிர்வகித்து வந்தார். இந்த நிலையில் நிர்மலன் திடீரென நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார். நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்திருந்த பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக குமரி மற்றும் கேரள போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நிதி நிறுவன உரிமையாளர் நிர்மலன் மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு கோர்ட்டில் சரணடைந்தார். அதைத் தொடர்ந்து நிர்மலனை குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நிர்மலன் தனது பெயரிலும், பினாமி பெயரிலும் குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் வாங்கு குவித்திருந்தது தெரியவந்தது. இந்த சொத்துகளின் விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதன்பிறகு நிர்மலன் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் பளுகலை சேர்ந்த பிரவீன் கிருஷ்ணா என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பிரவீன் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் மேலும் ஒரு இயக்குனர் ஆவார். பின்னர் அவரை மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
நிதி நிறுவன மோசடி குறித்து இதுவரை 5,031 புகார்கள் வந்துள்ளதாகவும், 868 கோடியே 45 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.