கோவில்பட்டியில் ரெயில் மோதி புதுமாப்பிள்ளை சாவு 2–வது திருமணம் செய்த 15 நாட்களில் பரிதாபம்


கோவில்பட்டியில் ரெயில் மோதி புதுமாப்பிள்ளை சாவு 2–வது திருமணம் செய்த 15 நாட்களில் பரிதாபம்
x
தினத்தந்தி 22 Dec 2017 3:00 AM IST (Updated: 22 Dec 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் 2–வது திருமணம் செய்த 15 நாட்களில் ரெயில் மோதி புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் 2–வது திருமணம் செய்த 15 நாட்களில் ரெயில் மோதி புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்.

கூலி தொழிலாளி

நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி என்ற பிரான்சிஸ் (வயது 45) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கோவில்பட்டி புதுகிராமம் 2–வது தெருவைச் சேர்ந்தவர் வேலுசாமி மகள் செல்வராணி (44). இவருடைய கணவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த நிலையில் பிரான்சிசுக்கும், செல்வராணிக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரான்சிஸ் தன்னுடைய 2–வது மனைவியுடன் கோவில்பட்டி புதுகிராமத்தில் உள்ள மாமனாரின் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை 10.30 மணியளவில் பிரான்சிஸ் தன்னுடைய மாமனாரின் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார்.

ரெயில் மோதி சாவு

கோவில்பட்டி புதுகிராமத்தில் இருந்து வேலாயுதபுரத்துக்கு செல்லும் வழியில் ரெயில்வே தண்டவாளம் உள்ளது. வேலாயுதபுரம் தனியார் பள்ளிக்கூடம் அருகில் ரெயில்வே தண்டவாளத்தை பிரான்சிஸ் கடக்க முயன்றார். அப்போது மைசூருவில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் எதிர்பாராதவிதமாக பிரான்சிஸ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரான்சிஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரெயில் மோதி இறந்த பிரான்சிஸ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2–வது திருமணம் செய்த 15 நாட்களில் ரெயில் மோதி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story