வாய்-காதை கைகளால் பொத்தி விவசாய சங்க பிரதிநிதிகள் நூதன போராட்டம்


வாய்-காதை கைகளால் பொத்தி விவசாய சங்க பிரதிநிதிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2017 11:00 PM GMT (Updated: 21 Dec 2017 7:59 PM GMT)

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் பேரவை கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள் வாய் மற்றும் காதை கைகளால் பொத்திக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 40-வது பேரவை கூட்டம் தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அனுஜார்ஜ் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலை வகித்தார். ஆலையின் செயல்பாடுகள் குறித்தும், நடப்பாண்டில் அரவை செய்யப்பட உள்ள கரும்பின் அளவு உள்ளிட்டவை குறித்தும் எடுத்து கூறப்பட்டு கூட்டம் தொடங்கியது.

அப்போது கரும்பு நிலுவைத்தொகையை வழங்குவது உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கை மனுவை தமிழ்நாடு சர்க்கரை கழக மேலாண்மை இயக்குனரிடம், விவசாய சங்க பிரதிநிதிகள் கொடுத்தனர். அந்த மனுவில், பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கும், அதன் மூலமாக வெளி ஆலைகளுக்கும் 2015-16, 2016-17-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வெட்டி அனுப்பிய வகையில் நிலுவை தொகை ரூ.26 கோடியை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனுக்குடன் வழங்கும் பொருட்டு சுழற்சி நிதியாக ரூ.50 கோடியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தற்போதைய அரவை பருவத்தில் மத்திய அரசின் பரிந்துரை விலை டன்னுக்கு ரூ.2,550-ஐ கரும்பு வெட்டிய 15 நாளில் ஒரே தவணையில் வழங்கிட வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

மேலும் இந்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல பல போராட்டங்களை நடத்திய போதும் அரசு செவிசாய்த்து வாய்மொழியில் கூட உத்தரவு பிறப்பிக்காததை கண்டித்து விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது கைகளினால் வாயையும், காதையும் பொத்திக்கொண்டு 5 நிமிடம் எழுந்து நின்று நூதன போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி கூறியதன் பேரில் விவசாய சங்க பிரதிநிதிகள் அமைதியாக உட்கார்ந்தனர்.அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அனுஜார்ஜ் பேசியதாவது:-

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டில் அரவை பருவத்திற்கு 1.6 லட்சம் டன் அரவை செய்வதற்காக 7,842 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2016-17-ம் ஆண்டு அரவை பருவத்தில் இந்த ஆலையின் மூலம் அரவை செய்த 1 லட்சத்து 91 ஆயிரத்து 222 டன் கரும்பிற்கும், வெளி ஆலைகளுக்கு அனுப்பி வைத்த 70 ஆயிரத்து 136 டன் கரும்பிற்கும் மத்திய அரசின் நியாயமான மற்றும் ஆதாயமான பரிந்துரை விலையான டன் ஒன்றுக்கு ரூ.2,300 வீதம் மொத்த கரும்பு கிரையத் தொகையாக ரூ.43.98 கோடியை சம்பந்தப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுவதுமாக பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மேலும் கரும்பு சுமைகளை வாகனங்களில் ஏற்றி வருவதற்கு ஏதுவாக 2016-17 அரவைப் பருவத்திற்கு எறையூர், லெப்பைக்குடிகாடு, வி.களத்தூர், அகரம்சீகூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 31 சாலைகள் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 200 செலவில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து கரும்பு சாகுபடி செய்து ஆலை இயங்க விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் சர்க்கரை கழக பொது மேலாளர் ஜெயினுலாபீதீன், பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி ரேவதி, தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் நிரும செயலர் குப்பன், உடமைப் பிரதிநிதி மற்றும் தலைமை சர்க்கரை ரசாயனர் முத்துவேலப்பன், தலைமை பொறியாளர் சுப்பிரமணியன், கரும்பு பெருக்கு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் ராஜாசிதம்பரம், செல்லதுரை, ஏ.கே.ராஜேந்திரன் உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story