அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்


அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்
x
தினத்தந்தி 21 Dec 2017 11:00 PM GMT (Updated: 2017-12-22T01:56:15+05:30)

ஆத்தூர் அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு வழங்கிய சாம்பார் சாதத்தில் பல்லி செத்து கிடந்ததால் பரபரப்பு நிலவியது.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பழனியாபுரி ஊராட்சி உள்ளது. இந்த ஊரின் மையப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் பழனியாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 153 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களில் 146 மாணவ-மாணவிகள் பள்ளியில் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

நேற்று வழக்கம்போல் சத்துணவு அமைப்பாளர் மணிமேகலை மேற்பார்வையில் சமையலர் வசந்தா சாம்பார் சாதம் சமைத்தார். மதியம் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. இதற்காக மாணவ-மாணவிகள் வரிசையில் நின்றார்கள். முதலில் 15 மாணவ-மாணவிகளுக்கு தட்டில் சாம்பார் சாதம் வழங்கினார்கள்.

அவர்கள் சத்துணவு கூடம் அருகே அமர்ந்து சாப்பிடத்தொடங்கினார்கள். இதையடுத்து மற்ற மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன்பு சாம்பார் சாதத்தை கிளறியபோது அதில் பல்லி செத்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, சத்துணவு சாப்பிட்டவர்களில் 3-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் மஞ்சுநாதன் (வயது 8), அருண் (8), கலைச்செல்வன் (8), கோகுல் (8), சரண்யா (8), சபரி (8), விஷ்ணு (8), துரை (8), அருண்குமார் (8), 4-ம் வகுப்பு மாணவர் கிருத்திகா (9), 5-ம் வகுப்பு மாணவர்கள் சரவணகுமார் (10), அரவிந்த் (11), 6-ம் வகுப்பு மாணவர் ராயர் (12) உள்பட 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உடனே, பள்ளி தலைமை ஆசிரியை ராணிசந்திரா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அந்த 14 மாணவ-மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் சபியுனிஷா, ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த மாணவ-மாணவிகளுக்கு ஆறுதல் கூறினர். இதுபற்றி அறிந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்து தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.

பள்ளியில் சமைக்கப்பட்ட சாம்பார் சாதத்தில் பல்லி விழுந்தது எப்படி? என்பது குறித்து ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 

Next Story