திருட்டை தடுக்க கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
திருட்டை தடுக்க கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் வலியுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி போலீசார், வணிகர்கள், பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நேற்று மாலை தமிழ்சங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) குணசேகரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவையில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வணிகர்கள் தங்கள் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். தற்போது பொருத்தி இருந்தால் அது சரியாக செல்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். கடைக்கு உள்ளே மட்டும் பொருத்தி இருந்தால் போதாது. கடைக்கு வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அவ்வாறு பொருத்தப்பட்டு இருந்தால் திருட்டு தடுக்கவும், கொள்ளை போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதேபோல் நலவாழ்வு சங்கம் சார்பில் தெருக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் பகுதியில் யாராவது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் செல்வம், தனசேகரன், ஜெய்சங்கர் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர்கள், வணிகர்கள், குடியிருப்பு நலவாழ்வு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட வர்த்தகர்கள், குடியிருப்பு நலவாழ்வு சங்கத்தினர், இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.