மாணவியின் சாவுக்கு நியாயம் கேட்பதுபோல் ஷோபா எம்.பி. நாடகமாடுகிறார் மந்திரி யு.டி.காதர் கடும் தாக்கு


மாணவியின் சாவுக்கு நியாயம் கேட்பதுபோல் ஷோபா எம்.பி. நாடகமாடுகிறார் மந்திரி யு.டி.காதர் கடும் தாக்கு
x
தினத்தந்தி 22 Dec 2017 9:00 PM GMT (Updated: 22 Dec 2017 8:20 PM GMT)

விஜயாப்புராவில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட மாணவியின் சாவுக்கு நியாயம் கேட்பதுபோல் ஷோபா எம்.பி. நாடகமாடுகிறார் என்று மந்திரி யு.டி.காதர் கூறினார்.

மங்களூரு,

விஜயாப்புராவில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட மாணவியின் சாவுக்கு நியாயம் கேட்பதுபோல் ஷோபா எம்.பி. நாடகமாடுகிறார் என்று மந்திரி யு.டி.காதர் கூறினார்.

மங்களூருவுக்கு வருகை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு நேற்று மந்திரி யு.டி.காதர் வந்தார். மங்களூருவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாடகமாடும் ஷோபா எம்.பி.

விஜயாப்புரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பள்ளிக்கூட மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கற்பழித்து கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். விரைவில் அந்த மர்ம நபர்கள் கைது செய்யப்படுவார்கள். இதற்கிடையே இந்த சம்பவத்தை அரசியலாக்கி அதில் இருந்து பா.ஜனதாவினர் ஆதாயம் பெற முயற்சிக்கிறார்கள். குறிப்பாக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான ஷோபா எம்.பி. உள்பட பலர் இந்த வி‌ஷயத்தை பெரிதுபடுத்தி தேவையில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஷோபா எம்.பி., கொலை செய்யப்பட்ட மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூட கூறவில்லை. ஆனால் மாணவியின் வி‌ஷயத்திற்காக போராட்டம் நடத்தியும், ஆக்ரோ‌ஷமாக பேட்டி அளித்தும் வருகிறார். அவர் மாணவியின் சாவுக்கு நியாயம் கேட்பதுபோல் நாடகமாடி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது.

பிரகாஷ் ராஜ் கலந்து கொள்கிறார்

இந்த வி‌ஷயத்தை அரசியலாக்காமல் குற்றவாளிகளை பிடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இனிமேல் இதுபோன்று ஒரு சம்பவம் நடக்காமல் அனைவரும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அவர்களின் அரசியல் நாடகத்தை காட்டுகிறது.

மங்களூரு கடற்கரையில் விரைவில் கடற்கரை திருவிழா நடைபெற உள்ளது. இதில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொள்ள இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story