மானுடம் போற்றிய மாமனிதர் பெரியார்


மானுடம் போற்றிய மாமனிதர் பெரியார்
x
தினத்தந்தி 23 Dec 2017 5:45 AM GMT (Updated: 2017-12-23T11:01:50+05:30)

“தொண்டு செய்து பழுத்த பழம்” என்று பாவேந்தரால் புகழப் பெற்ற பெருந்தகை தந்தை பெரியார். நாளை (டிசம்பர் 24) அவருடைய நினைவு தினம்.

ஈரோட்டில் வெங்கடப்ப நாயக்கர்-சின்னத்தாயம்மாள் இணையர்க்கு இளைய மகனாகப் 17.09.1879 அன்று பிறந்தார், நம் இராமசாமி! ஆம்! இதுவே பெரியாரின் இயற்பெயர். ஆரம்பத்தில் கூலி வேலை செய்து வந்த பெற்றோர், பிறகு வாணிபம் தொடங்கிப் படிப்படியாக வளர்ந்து, பின்னாளில் ஈரோட்டில் பாதி ஊர் இவர்களுக்குச் சொந்தம் எனும் நிலைக்கு உயர்ந்தனர்.

‘மனிதனை நேசி, மற்றதை யோசி’ எனும் தத்துவத்தை இளம்பருவத்தில் இருந்தே, சிந்தித்துச் செயல்படத் தொடங்கினார் பெரியார், ‘தான்-தன் குடும்பம்’ என்பது மட்டுமே வாழ்க்கை என வாழ்ந்த மக்களிடையே, தம்மைச் சுற்றிலும் சமுதாயம் என்பதொன்றுண்டு, அதன் வளர்ச்சிக்காகவும் உழைக்க வேண்டும் எனக் கருதியவர் பெரியார். இதற்கெல்லாம் பிறவியிலேயே அவர் நெஞ்சத்தில் இழையோடிய மனிதநேயமே முக்கியக் காரணமாகும்.

பெரியார்க்கு முன்பும், பின்பும் வாழ்ந்த சான்றோர்கள் சமுதாயத்தின் ஏதேனும் ஒருதுறை பற்றி மட்டுமே சிந்தித்தனர். அப்படியே செயல்பட்டனர். ஆனால் தந்தை பெரியார் மட்டுமே, மதம், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், மொழி, இனம் எனும் சமுதாயத்தின் அனைத்துத் துறைகளை பற்றியும் சிந்தித்தார், அப்படியே செயல்பட்டார், எண்ணியது எண்ணியாங்கு எய்தினார். உலக வரலாற்றிலேயே பெரியார் போன்று தமது வாழ்நாளிலேயே தமது கொள்கைகள் வெற்றி பெற்றதைக் கண்கூடாகக் கண்டவர் எவருமிலர்.

பெரியாரின் வெற்றிக்கு அவரது மனிதநேயப் பண்பே முதற்காரணமும், முழுக்காரணமும் ஆகும். பொதுவாக இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் பெரியார் என்றதும் பெரும்பாலானோர் “மின்சாரத்தைத்” தொட்டது போன்று அதிர்ச்சி அடைகின்றனர். இதற்குப் பெரியார் “கடவுள் மறுப்பாளர்” என்பதொரு காரணம். ஒரு குறிப்பிட்ட சமூக மக்களைக் கடுமையாகச் சாடியவர் என்பது மற்றொரு காரணமாகும்.

“உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நீ எதிர்பார்க்கின்றாயோ, அது போன்றே மற்றவர்களை நீ நடத்த வேண்டும். அதுதான் ஒழுக்கம்” என்பது பெரியார் கருத்தாகும்.

வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை சீர்திருத்தக்காரர்கள் அனைவரும் ஒரு கையில் இறை நம்பிக்கையையும், மறுகையில் சீர்திருத்தமும் ஏந்திச் செயல்பட்டனர். ஆனால் பெரியார் ஒரு கையில் துணிச்சலையும், மறு கையில் சீர்திருத்தத்தையும், நெஞ்சம் நிறைய மனிதநேயத்தையும் ஏந்திச் செயல்பட்டார். ‘கடவுளை மற. மனிதனை நினை’ என்றார். இதனால்தான் இவரால் மிகப்பெரிய மாற்றத்தைத் தமது வாழ்நாளிலேயே உருவாக்கிக் காட்ட முடிந்தது.

பெரியாருக்கு முன்பு தமிழகப் பெண்களின் நிலை விலங்கினும் கீழாக இருந்தது. எந்த உரிமையும் இல்லை. கல்வி, சொத்து, சமூக மதிப்பு என எதுவும் கிடையாது. பெரியார் வந்தார். அவர்களுக்காகவே சிந்தித்தார். அவர்களுக்காகவே போராடினார். பெண்களும் சிந்தித்ததால், கல்வி கற்று பதவிகள் பெற்றனர்.

சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் 13.11.1938 அன்று தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு கூடியது. இம்மாநாட்டில்தான் மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரும், மீனாம்பாள் சிவராசும், டாக்டர் தருமாம்பாள் அம்மையாரும் ஈ.வே.ரா.வுக்கு “பெரியார்” எனும் சிறப்புப் பட்டத்தை வழங்கினர்.

பெரியாரின் முதல் சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் கூடியபோது இயற்றப் பெற்ற சில தீர்மானங்கள் பெண்கள் முன்னேற்றத்தில் பெரியாருக்கு இருந்த ஆழ்ந்த ஈடுபாட்டினைப் புலப்படுத்துவதை காணமுடியும். பதினாறு வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். விதவைக்கு மறுமண உரிமையும், பெண்களுக்கு மணவிலக்கு உரிமையும் தேவை. பெண்களுக்கும், ஆண்களைப் போலவே சமமாகச் சொத்துரிமையும், வாரிசுரிமையும் வழங்கப்பெற வேண்டும். பெண்களும், ஆண்களைப் போலவே எந்தத் தொழிலையும் நடத்த சமஉரிமையும், வாய்ப்பும் தரப்பட வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் பணியில் பெண்களே அதிக அளவில் நியமிக்கப் பெற வேண்டும். தொடக்கக்கல்விக்கான ஆசிரியர்களாகப் பெண்கள் மட்டுமே நியமிக்கப் பெற வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் தொடர்ந்து நடந்த மாநாடுகளிலும் வலியுறுத்தப்பட்டன. பின்வந்த அரசுகளால் இவை சட்டமாக்கப்பட்டு பெரியாருக்கு பெருமை சேர்த்துள்ளன.

பெரியார் உயிருடன் வாழ்ந்த மொத்த நாள்கள் 34 ஆயிரத்து 433 அகும். இந்த நாள்களில் அவர் பெரும்பாலான நேரத்தைப் பேசவும், எழுதவும் பயன்படுத்தினார். அவர் செய்த மொத்தப் பயண தூரம் 15 லட்சத்து 12 ஆயிரம் கிலோமீட்டர். அவர் சொற்பொழிவாற்றிய மொத்த நேரம் 21 ஆயிரத்து 400 மணி. இந்தப் பேச்சுகளை ஒலிப்பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதம் 11 நாள் வரை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்னும் ஓர் ஆய்வுக்குறிப்பு பெரியாரின் வியக்க வைக்கும் சாதனைகளுள் ஒன்றாகும்.

இன்று தமிழர்கள் நாம் அனைவரும் சாதி மறந்து, கட்சிகள் மறந்து பொது இடங்களில் கூடுகிறோம். கலப்புத் திருமணங்கள் இயல்பாகிவிட்டன. பெயருக்குப் பின்னால் சாதி வால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. எல்லா சாதி மதத்தினரும் ஒரே தெருவில், குடியிருப்பில் வசிக்கின்றோம். குடிசைவாசிகளும் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.க்களாக வர முடிகின்றது. இதற்கெல்லாம் மூலக்காரணம் பெரியார்தான். பெரியார் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு தமிழரும் பயில வேண்டும். பாடநூல்களாக அரசு அமைக்க வேண்டும்.

மானிடம் போற்றிய மாமனிதர் பெரியாருக்கு நன்றி சொல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் கடமை!

முனைவர் வேலூர் ம.நாராயணன்

Next Story