கடந்த ஆண்டு திருட்டு போன ரூ.5¼ கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்பு போலீஸ் கமிஷனர் பேட்டி
கோவை மாநகரில் கடந்த ஆண்டு (2017) திருட்டு போன ரூ.5 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டதாக போலீஸ் கமிஷனர் பெரியய்யா கூறினார்.
கோவை,
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது–
கடந்த 2017–ம் ஆண்டை பொறுத்தவரை கோவை மாநகர போலீசாரின் தொடர் ரோந்து மற்றும் குற்றத் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் காரணமாக கொடுங்குற்றங்களான ஆதாய கொலை, கூட்டுக் கொள்ளை போன்ற குற்றங்கள் நடைபெறவில்லை. ஆண்டு கடைசியில் வடமாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் கொள்ளை கும்பல் தலைவனை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2017–ம் ஆண்டு நடந்த கொள்ளை சம்பவங்களில் 81 சதவீத வழக்குகள் துப்பு துலக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 85 சதவீத திருட்டுப்போன ரூ.5 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் கைப்பற்றப்பட்டன.
2016–ம் ஆண்டு திருட்டு போன சொத்துகளின் மதிப்பு ரூ.3 கோடியே 62 லட்சத்து 39 ஆயிரத்து 249 ஆகும். 2016–ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2017–ம் ஆண்டில் 9 சதவீத வழக்குகள் அதிகமாக கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 8 சதவீதம் கூடுதலாக களவு போன பொதுமக்களின் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
சாலை விதிகளை தீவிரமாக அமல்படுத்தப்பட்டதால் 2017–ம் ஆண்டு 1,294 சாலை விபத்துகள் நடந்துள்ளது. 2016–ம் ஆண்டு 1,377 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த நிலையில் 2017–ம் ஆண்டு 83 விபத்துகள் குறைந்துள்ளன. சாலை விதிமுறை மீறல்களுக்காக 2017–ம் ஆண்டு 5 லட்சத்து 27 ஆயி ரத்து 504 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.8 கோடியே 2 லட்சத்து 17 ஆயிரத்து 304 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
2016–ம் ஆண்டு 4 லட்சத்து 11 ஆயிரத்து 366 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 6 கோடியே 20 லட்சத்து 21 ஆயிரத்து 665 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது கூடுதலாக ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கூடுதல் அபராதமாக ரூ. 1 கோடியே 81 லட்சத்து 95 ஆயிரத்து 639 வசூல் செய்யப்பட்டது.
2017–ம் ஆண்டு 22 கொலை வழக்குகளும், 2016–ம் ஆண்டு 25 வழக்குகளும் பதிவாகியுள்ளன. காய வழக்குகளை பொறுத்தவரை 2017–ம் ஆண்டு 204 வழக்குகளும், 2016–ம் ஆண்டு 258 வழக்குகள் பதிவாயின. இது முந்தைய ஆண்டை விட 24 வழக்குகள் குறைவு. 2017–ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 35 வழக்குகள் குறைவாக பதிவாகி உள்ளன.
2016–ம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை, தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவு மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் பேராட்டங்கள், ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள், பிரதமர் உள்பட பல முக்கிய பிரமுகர்களின் வருகை மற்றும் பாதுகாப்பு அனைத்திலும் சீரிய கவனத்துடன் செயல்பட்டதில் மாநகரில் பொது அமைதியானது பாதுகாக்கப்பட்டுள்ளது.
வரும் புத்தாண்டிலும் கோவை மாநகர போலீசாரின் பணியானது சீரிய முறையில் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.